Published : 08 Apr 2018 08:50 PM
Last Updated : 08 Apr 2018 08:50 PM

காவிரி விவகாரம்: தோனிக்கு நடிகர் சிம்பு வேண்டுகோள்

காவிரி விவகாரம் நேரத்தில் ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில் நடிகர் சிம்பு ஐபிஎல் கேப்டன் தோனிக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

''காவிரி பிரச்சினை, மீத்தேன், ஸ்டெர்லைட் பிரச்சினைன்னு ஓடிக்கிட்டிருக்கு. இதற்காக மக்கள் போராடுகிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று இவ்வளவு பிரச்சினை போய்க்கிட்டிருக்கு. இதில் பேசப்படும் விஷயம் என்னவென்றால் ஐபிஎல் மேட்ச் ஆரம்பித்துவிட்டது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் வருது. இதில் பலரும் நியாயமான கருத்தை முன் வைத்துள்ளனர்.

இப்படி ஒரு பிரச்சினை நடந்து வரும் நேரத்தில், வாழ்க்கையே ஒரு போராட்டமாக இருக்கும் நேரத்தில் ஐபிஎல் போட்டிகள் எல்லாம் தேவையா? நம்ம வாழ்க்கையே ஒரு விளையாட்டாக இருக்கும் போது இந்த விளையாட்டு தேவையா, நாம் இதைப் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

நல்ல கருத்து தான், ஆனால் இப்போதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் வந்திருக்கு. இது விஷயமாக அப்பாவிடம் பேசும்போது சொன்னார். டிக்கெட்டெல்லாம் விற்று விட்டார்கள், கருப்பு சட்டை போட்டுச் செல்லுங்கள் என்று சொன்னார். ஆனால் டிஆர் சொன்னால் பிரச்சினை. ரஜினி, கமல் சொன்னாலும் பிரச்சினை.

இப்ப பேசுவதுதான் பிரச்சினை அல்லவா? எல்லோரும் தமிழனுக்காக பேசுகிறார்கள். மேட்ச் பார்ப்பதற்காக செல்லுங்கள். ஆனால், போகிறவர்கள் கருப்பு டிரஸ் அணிந்து செல்லுங்கள். நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், எங்களை தயவு செய்து உள்ளே விடுங்கள். மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், அதாவது ஐபிஎல்லை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்ல வருகிறேன்.

தோனி, இரண்டாவது தடவையாகவும் கேப்டனாக வருகிறார். அவர் மேல் மிகுந்த மரியாதை உண்டு எனக்கு. நம் தமிழ்நாடு மீதும், சென்னை மக்கள் மீதும் நாம் வைத்திருக்கும் அன்பை விட அதிகமாக அன்பு வைத்துள்ளவர் தோனி. அவர் கண்டிப்பாக இந்த விஷயத்தைப் பார்ப்பார்.

அவர் போராட்டம் நடத்த வேண்டும், போட்டியைப் புறக்கணிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. உங்களால் செய்ய முடியும் சின்ன விஷயத்தை எதாவது ஒரு ரூபத்தில் செய்யுங்கள் என்று கோரிக்கை வைக்கிறேன். ஏனென்றால் அவருக்கு தமிழக மக்கள் மீது மிகுந்த அன்பு உண்டு என்று தெரியும் அதனால் கேட்கிறேன்.''

இவ்வாறு சிம்பு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x