Published : 10 May 2024 12:39 PM
Last Updated : 10 May 2024 12:39 PM
சென்னை: பிற மாநில ஊழியர்களுக்கு பிராந்திய மொழி கற்பிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் பயணிகளுக்கும், முன்களத்தில் பணியாற்றும் ரயில்வே ஊழியர்களுக்கும் இடையிலான மொழி சார்ந்த சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும் என நம்பப்படுகிறது.
ஊழியர்கள் சிலர் பயணிகளுடன் சம்பந்தப்பட்ட பிராந்திய மொழியில் பேசாதது பின்னடைவாக அமைகிறது. சமயங்களில் இதனால் சிக்கலும் எழுகிறது. இந்தச் சூழலில் அதற்கு தீர்வு காணும் வகையில் இந்த நகர்வை தெற்கு ரயில்வே முன்னெடுத்துள்ளதாக தகவல்.
தமிழகம் மற்றும் கேரளாவில் பணியமர்த்தப்பட்டுள்ள ஊழியர்கள், பிற மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருப்பதால் அவர்களுக்கு உள்ளூர் மொழி அறவே தெரியவில்லை. அதை ரயில்வே நிர்வாகம் அறிந்த நிலையில் மக்களுக்கும், நிர்வாகத்துக்கும் சிறந்த முறையில் சேவை செய்ய தமிழ், மலையாளம் போன்ற பிராந்திய மொழி அறிவை அவர்கள் பெறுவது அவசியம் என சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனை ரயில்வே வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
இது குறித்து அனைத்து துறைகளின் தலைவர்கள், பணிமனைகள், ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி மையங்கள், சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு கோட்ட ரயில்வே மேலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சு வழக்கிலான அடிப்படை மொழி பயிற்சி சார்ந்த தொகுப்பை உருவாக்கும் படி இவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் பிராந்திய மொழிகளை கற்க உதவும் ‘பாஷா சங்கம்’ செயலியை ஊழியர்கள் மத்தியில் தெரிவிக்கலாம் என்ற யோசனையும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே டிக்கெட் முன்பதிவு, டிக்கெட் பரிசோதகர்கள், கேட்டரிங் ஊழியர்கள், லோகோ பைலட்கள் என பெரும்பலானவர்கள் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்களுடன் தொடர்பு கொள்வது பயணிகள் மட்டுமல்லாது ரயில்வே ஊழியர்களுக்கே சிக்கலாக இருப்பதாக தகவல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT