Published : 10 May 2024 05:29 AM
Last Updated : 10 May 2024 05:29 AM

வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி பழுதின்றி இயங்க நடவடிக்கை: மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு சத்யபிரத சாஹூ அறிவுறுத்தல்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில்ல் ஏப்.19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள், அந்தந்த தொகுதிகளில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள 45 கட்டிடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இக்கட்டிடங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், வளாகம் முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் அறை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், முதலில் நீலகிரி அதைத் தொடர்ந்து, ஈரோடு, தென்காசி, மதுரை, விழுப்புரம் ஆகிய தொகுதிகளைத் தொடர்ந்து, நேற்று தென்சென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பழுது ஏற்பட்டது. இதனால் சர்ச்சை உருவானது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஸ்டிராங் அறையின் உள்ளேயும் 2 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை இரண்டும் அறைக்கு வெளியில் வைக்கப்பட்டுள்ள எல்இடி டிவியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலமே வேட்பாளர்களின் முகவர்கள், அலுவலர்கள், காவல்துறையினர் கண்காணிக்கின்றனர்.

கேமரா பழுது ஏற்பட்டதால் எழுந்த சர்ச்சைகளை தொடர்ந்து, ஸ்டிராங் அறையின் உள்ளே பொருத்தப்பட்டுள்ள 2 கேமராக்களையும் தனித்தனியாக 2 டிவிக்களில் பொருத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு அதன்படி, பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ, நேற்று மாலை அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாநகராட்சி ஆணையர்கள் உள்ளிட்டோருடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதில், மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி.கள், பொதுப்பணித்துறை மாவட்ட பொறியாளர்களும் பங்கேற்றனர். அப்போது, கண்காணிப்பு கேமராக்கள் பழுதில்லாமல் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டிராங் அறையின் கதவு முன்பாக, ஒரு கூடுதல் கேமரா நிறுவ வேண்டும் என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஸ்டிராங் அறையில் ஒரு கேமரா இணைப்பு பழுதானாலும், மற்றொரு கேமராவின் இணைப்பு மூலம் கண்காணிக்க தனித்தனியாக டிவிக்களுடன் கேமராக்களை இணைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பொதுப்பணித்துறை, மின் வாரியத்துடன் இணைந்து வாக்கு எண்ணும் மையங்களில் கேமராக்கள் தொடர்ந்து இயங்க தேவையான மின்சாரத்தை தடையின்றியும் சீராகவும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு வேளை மின் தடை ஏற்பட்டால் தானியங்கி ஜெனரேட்டர்களும், ஸ்டிராங் அறையில் மின் தடை ஏற்பட்டால் உடனடியாக மின் இணைப்பு வழங்க யுபிஎஸ் வசதியும் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. மின்னல் போன்றவற்றால் கேமராக்கள் இயக்கம் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x