Published : 02 Apr 2018 12:10 PM
Last Updated : 02 Apr 2018 12:10 PM

நியூட்ரினோ எதிர்ப்பு: தீக்குளித்த மதிமுக நிர்வாகி உயிரிழப்பு

 மதுரையில் நடைபெற்ற நியூட்ரினோ திட்ட எதிர்ப்பு தொடக்க நிகழ்ச்சியில் தீக்குளித்த சிவகாசியைச் சேர்ந்த மதிமுக நிர்வாகி ரவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தேனியில் அமையவிருக்கும் நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை கடந்த 28-ம் தேதி அனுமதியளித்தது. இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நியூட்ரினோ திட்ட எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி கடந்த மார்ச் 31-ம் தேதி மதுரை பழங்காநத்தத்தில் துவங்கியது.

இந்நிகழ்ச்சியில் மதிமுக தொண்டர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பல்வேறு இயக்கத்தினர் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர். இந்நிலையில், நிகழ்ச்சியில் மேடையில் வைகோ பேசிக்கொண்டிருந்தபோது, நடைபயணத்தில் கலந்துகொண்ட மதிமுக நிர்வாகி சிவகாசியை சேர்ந்த ரவி என்பவர் திடீரென தீக்குளித்தார்.

இதையடுத்து, தீக்காயங்களுடன் ரவி மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், ரவி இன்று (திங்கள் கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரான ரவிக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர்.

உயிரிழந்த நிர்வாகிக்கு மருத்துவமனைக்கு சென்று வைக்ோ அஞ்சலி செலுத்தினார்.

ரவி தீக்குளித்தபோது மேடையில் பேசிய வைகோ, “எந்த சூழ்நிலையிலும் தீக்குளிக்க முயற்சி செய்யாதீர்கள் என தொண்டர்களுக்கு பலமுறை சொல்லியிருக்கிறேன்.” என தெரிவித்தார்.

அப்போது, முல்லை பெரியாறு உட்பட பல போராட்டங்களில் தீக்குளித்தவர்களை நினைவுகூர்ந்து கண்ணீருடன் வைகோ உணர்ச்சிவசப்பட்டு பேசியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x