Published : 03 Apr 2018 09:46 AM
Last Updated : 03 Apr 2018 09:46 AM

சென்னையில் 2 பேருக்கு காலரா நோய் பாதிப்பு: காரணம் தெரியாமல் அதிகாரிகள் குழப்பம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் வேறு நோய்க்காக சிகிச்சை பெற்றுவந்த 2 பேருக்கு திடீரென காலரா பாதிப்பு ஏற்பட்டது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது. இத்தகவலை தனியார் மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக அரசுக்கு தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, அந்த மருத்துவமனையில் உள்ள உணவகத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி, உணவு மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், பொது சுகாதாரத் துறை, மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து மருத்துவமனையைச் சுற்றிலும் ஆய்வு மேற்கொண்டனர். காலராவால் பாதிக்கப்பட்ட 2 பேரின் வீடுகளைச் சுற்றியும் ஆய்வு நடத்தப்பட்டது.

பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தலின் பேரில், சென்னை குடிநீர் வாரியம் சார்பில் மாநகரம் முழுவதும் குடிநீர் தரப் பரிசோதனை நடத்தப்பட்டது. குடிநீரில் காலரா கிருமி இல்லை என்று குடிநீர் வாரியம் அறிவித்துவிட்டது. உணவு பரிசோதனை அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என தெரிகிறது.

இதற்கிடையில், எதன் காரணமாக இருவரும் காலராவால் பாதிக்கப்பட்டனர் என்று தெரியாமல் அரசுத் துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

அச்சப்பட தேவையில்லை

இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘இருவருக்கும் காலரா நோய் தாக்கம் இருப்பது உறுதிசெய்யப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, 2 பேரும் குணமடைந்துவிட்டனர். அதன் பிறகு யாருக்கும் காலரா பாதிப்பு இல்லை. எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவை இல்லை. சில ஆண்டுகள் சென்னையில் காலரா பாதிப்பு இல்லாத நிலையில், மீண்டும் தலை தூக்கியதற்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x