Last Updated : 26 Apr, 2018 09:30 AM

 

Published : 26 Apr 2018 09:30 AM
Last Updated : 26 Apr 2018 09:30 AM

மருத்துவம் படிக்க வெளிநாடு செல்லும் மாணவர்கள் தகுதி சான்றிதழ் வாங்க தேவையில்லை: இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு

நீட் தேர்வில் தகுதிபெற்று மருத்துவம் படிக்க வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்கள், தகுதிச் சான்றிதழ் பெறத் தேவையில்லை என்று இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காத மாணவர்கள் பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று மருத்துவம் படிக்கின்றனர். இந்த ஆண்டு முதல் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க செல்லும் மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி வரும் மே மாதம் 6-ம் தேதி நீட் தேர்வு நடைபெறுகிறது. இதற்கிடையில் கடந்த ஆண்டு வெளிநாடுகளுக்கு மருத்துவம் படிக்க சென்றவர்கள் நீட் தேர்வு கண்டிப்பாக எழுத வேண்டுமா என்று விளக்கம் கேட்டு மாணவர்கள், பெற்றோர்களிடம் இருந்து ஏராளமான கடிதங்கள் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு (எம்சிஐ) வந்தன. இது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்காக இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்வாகக் குழு கூட்டம் கடந்த 12-ம் தேதி நடைபெற்றது.

மே 31-ம் தேதிக்குள்...

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் செயலாளர் (பொறுப்பு) டாக்டர் ரீனா நாயர் வெளியிட்ட அறிக்கையில் கூறியி ருப்பதாவது:

வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க கடந்த ஆண்டு சென்ற மாணவர்கள் நீட் தேர்வு எழுத தேவையில்லை. அந்த மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படு கிறது. ஆனால், இந்திய மருத்துவ கவுன்சிலிடம் இருந்து தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும். வரும் மே மாதம் 31-ம் தேதிக்குள் தகுதிச் சான்றிதழ் பெறுவதற்கு உரிய ஆவணங்களுடன் இந்திய மருத்துவ கவுன்சிலில் விண்ணப்பிக்க வேண்டும். வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர் களுக்கு இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் தகுதிப் பெற்று வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பவர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிடம் இருந்து தகுதிச் சான்றிதழ் பெறத் தேவை யில்லை.

இவ்வாறு டாக்டர் ரீனா நாயர் தெரிவித்துள்ளார்.

லிம்ரா நிறுவனத்தின் இயக்கு நர் முகமது கனியிடம் இது குறித்து கேட்டபோது, “பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் மருத்துவம் படித்து முடித்தவர்கள், இந்தியாவில் டாக்டராக பணியாற்ற இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் எப்எம்ஜிஇ (FMGE) என்ற தகுதித் தேர்வை எழுத வேண்டும். நீட் தேர்வு எழுதி மருத்துவம் படிக்க வெளிநாடு செல்பவர்கள் இந்த தகுதிச் சான்றிதழ் வாங்கத் தேவையில்லை என்று இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. ஆனால், தகுதித் தேர்வு கண்டிப்பாக எழுத வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x