

உடலை குண்டாக்குவதற்காக சென்னை வந்து, பலரால் ஏமாற்றப்பட்டு ஜட்டியுடன் திரிந்த சூடான் நாட்டு இளைஞரை போலீஸார் மீட்டு சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை போலீஸ் கட்டுப் பாட்டு அறைக்கு கடந்த மாதம் 26-ம் தேதி ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ‘‘மாதவரம் பேருந்து நிலையத்தில் ஜட்டி யுடன் வெளிநாட்டுக்காரர் ஒருவர் சுற்றித் திரிகிறார்’’ என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். மாதவரம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சென்று, ஜட்டியுடன் திரிந்த இளைஞரை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தார். மிகவும் ஒல்லியான தேகத்துடன் காணப்பட்ட அவர், ஆப்ரிக்காவை சேர்ந்தவர்போல இருந்தார். அவரிடம் மாதவரம் துணை கமிஷனர் விமலாவும் விசாரணை நடத்தினார்.
அந்த இளைஞரிடம் போலீஸார் ஆங்கிலத்தில் பேசிப் பார்த்தனர். ஆனால் மொழிப் பிரச்சினையால் அவரைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள முடியாமல் திண்டாடினர். அதே பகுதியில் வசித்து வந்த நைஜீரிய இளைஞர் ஒருவரை அழைத்து வந்து பேச வைத்தனர். அப்போதுதான் ஜட்டியுடன் சிக்கியவர் சூடான் நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரிந்தது. இருப்பினும் நைஜீரிய இளைஞரால் சூடான் மொழியை முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை.
இதையடுத்து இன்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் படித்து வரும் சூடான் மாணவரை அழைத்து வந்து இளைஞரிடம் பேச வைத்தனர். அதன் பிறகே அவரைப் பற்றிய அனைத்து தகவல்களும் தெரியவந்தன.
அந்த இளைஞரின் பெயர் நேவல்கூப். சூடானில் 30 மாடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். மிகவும் ஒல்லியாக இருந்த அவர் உடலை குண்டாக்க பல வழிகளில் முயன்றுள்ளார். இதை தெரிந்துகொண்ட அந்நாட் டைச் சேர்ந்த புரோக்கர் ஒருவர், ‘சென்னைக்கு போனால், உடலை குண்டாக ஆக்குவதற்கு சிகிச்சை அளிக்கிறார்கள்’ என்று சொல்லி கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றின் முகவரியைக் கொடுத்து அனுப்பி வைத்துள்ளார். இதை நம்பி, விமானம் மூலம் சென்னை வந்த நேவல் கூப், நட்சத்திர ஓட்டலுக்கு சென்று தங்குவதற்கு இடம் கேட்டுள்ளார். அப்போது அவரிடம் 200 அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பு ரூ.9 ஆயிரம்) மட்டுமே இருந்துள்ளது.
ஓட்டல் ஊழியர்கள் உள்ளே அனுமதிக்காததால் அப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார். அப்போது வழிப்பறி ஆசாமிகள், அவர் வைத்திருந்த பாஸ்போர்ட், விசா, அமெரிக்க டாலர் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றுள்ளனர். மாற்று உடைகளையும் பறிகொடுத் துள்ளார். இதனால் எங்கு செல்வது என்று தெரியாமல் ஜட்டியுடன் சென்னையில் பல இடங்களில் சுற்றித் திரிந்துள்ளார்.
கொள்ளையர்கள் தாக்கி யதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டிருந்தது. அவரை மருத்துவமனையில் போலீஸார் சேர்த்தனர். இதற்கிடையே, டெல்லியில் உள்ள தூதரகத்தின் உதவியுடன் அவருக்கு மாற்று பாஸ்போர்ட், விசா ஆகியவற்றை ஏற்பாடு செய்து கொடுத்தனர். கையில் பணம் இல்லாமல் தவித்த சூடான் இளைஞரிடம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ரூ.10 ஆயிரம் கொடுத்து சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்தார்.