

திமுக தலைவர் கருணாநிதி கட்சித் தொண்டர்களுக்கு வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சட்டப்பேரவை கூட்டத் தொடரின் நிறைவு நாளான கடந்த 12-ம் தேதி 19 சட்ட மசோதாக்களை அவசர அவசரமாக நிறைவேற்றி இருக்கிறார்கள். அந்த மசோதாக்களில் ஒன்று, கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்கள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், பாலியல் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்துபவர்கள், காணொலித் திருடர்கள் போன்றோர் முதல்முறை குற்றம் புரியும்போதே குண்டர் சட்டத்தில் கைது செய்ய வழிவகை செய்து இயற்றப்பட்ட மசோதாவாகும்.
இதுபோன்ற சட்டப் பிரிவு இல்லாத நேரத்திலேயே வீரபாண்டி ஆறுமுகம், ஜெ.அன்பழகன் ஆகியோரையும் அதே நாளில் திருவாரூரில் பொருளாளர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளை அதிமுக அரசு கைது செய்தது. நீதிமன்றத்தை அணுகி சட்ட விதிமுறைகளின்படி ஜாமீன் பெற்றால் அவர்களில் சிலர் மீது குண்டர் சட்டத்தைப் பிறப்பித்து விசாரணையே இன்றி சிறையிலே அடைத்தது.
குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் தங்களை விடுவிக்கக் கோரி தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் 212 வழக்குகளில் தீர்ப்பு கூறியது. அதன்படி இந்த 212 வழக்குகளில் உள்ள குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
அரசியல் ரீதியாகப் பழி வாங்க வேண்டுமென்ற நோக்கில், எதிர்க்கட்சியினரை கைது செய்யக்கூடிய வகையில் மிகவும் ஆபத்தான இந்தத் திருத்தத்தைக் கொண்டு வந்து பேரவையில் நிறைவேற்றியிருப்பது, ஜனநாயகம் உயிர்த்தெழ முடியாமல் ஆழக்குழி தோண்டி புதைக்கும் முயற்சி ஆகும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.