Published : 09 May 2024 04:04 AM
Last Updated : 09 May 2024 04:04 AM
விழுப்புரம்: கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது,விழுப்புரம் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 3,500-க்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான விழுப்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி அறைகளில் வைக்கப் பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றிலும் 314 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 3-ம் தேதி வாக்கு எண்ணும் மையத்தில் இருந்த யுபிஎஸ் பழுதாகி, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் அரை மணி நேரம் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்து, பின்னர் சரி செய்யப்பட்டன. இந்நிலையில் நேற்று மீண்டும் வாக்கு எண்ணும் மையத்தில் காலை 7.28 மணி முதல் 8.05 வரை விழுப்புரம், திண்டிவனம் சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் மட்டும் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தன.
இதுகுறித்து தகவலறிந்ததும் பணியாளர்கள் உடனடியாக வரவழைக் கப்பட்டு, சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு சிசிடிவி கேமராக்கள் மீண்டும் இயங்க தொடங்கின. இதைத் தொடர்ந்து விழுப்புரம் மக்களவைத் தொகுதியின் விசிக வேட்பாளரான ரவிக் குமார், திண்டிவனம் அதிமுக எம்எல்ஏ அர்ஜுனன், விழுப்புரம் அதிமுக நகர செயலாளர் பசுபதி ஆகியோர் அங்கு வந்து பாதுகாப்பு அறைகளைப் பார்வையிட்டனர்.
இதற்கிடையே வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த தேர்தல் அலுவலரான ஆட்சியர் பழனி, செய்தியாளர்களிடம் கூறும்போது, “இடியுடன் கூடிய திடீர் மழையால் 8 கேமராக்கள் செயலிழந்து, 35 நிமிடங்களில் சரிசெய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு அறை ஒவ்வொன்றுக்கும் 30 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு அறையைச் சுற்றி 150 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மற்ற அனைத்தும் அப்போது இயங்கின” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT