Published : 19 Apr 2018 09:15 AM
Last Updated : 19 Apr 2018 09:15 AM

தமிழக ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி புதுச்சேரி ஆளுநர் மாளிகை முற்றுகை: போராட்டத்தில் ஈடுபட்ட 63 பேர் கைது

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரியும், தமிழக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தியும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற திராவிடர் விடுதலை கழகத்தினர் 63 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளிடம் செல்போனில் பேசி, அவர்களை பாலியல் ரீதியாக தவறான முறையில் நடக்க கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்தது. மாணவிகளிடம் நிர்மலாதேவி பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

நிர்மலாதேவி பேசிய ஆடியோவில் தமிழக ஆளுநரை பற்றி குறிப்பிடுவது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆளுநர் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், “தன் மீதான குற்றச்சாட்டு தவறானது. இதில் வெளிப்படையான விசாரணை நடத்தப்படும்’’ என்று தெரிவித்து உள்ளார்.

முற்றுகை போராட்டம்

இந்நிலையில், தமிழக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தியும், பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரியும் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் புதுச்சேரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடைபெற்றது.

புதுச்சேரி - செஞ்சி சாலையில் திராவிடர் விடுதலை கழகத் தலைவர் லோகு அய்யப்பன் தலைமையில் கூடிய நிர்வாகிகள், அங்கிருந்து மத்திய அரசு மற்றும் தமிழக ஆளுநரை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை நோக்கி வந்தனர். கைகளில் தமிழக ஆளுநருக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட பதாகைகளை வைத்திருந்தனர்.

போலீஸுடன் தள்ளுமுள்ளு

தலைமை அஞ்சல் நிலையம் அருகே வந்தபோது சாலையின் குறுக்கே தடுப்புகளைப் போட்டு போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். எனினும், தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் செல்ல முயன்றனர்.

இதனால், போலீஸாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உள்ளிட்ட 63 பேரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x