Published : 23 Apr 2018 08:12 AM
Last Updated : 23 Apr 2018 08:12 AM

பாஜகவினர் கருப்பு கொடி காட்டி போராட்டம்: வைகோ வாகனம் மீது கல்வீச்சு- இரு தரப்பு மோதலில் 8 பேர் காயம், 40 பேர் மீது வழக்கு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வைகோ பிரச்சாரம் மேற்கொண்ட போது, பாஜகவினர் கருப்பு கொடி காட்டினர். அப்போது சிலர் கல்வீச்சில் ஈடுபட்டதால் கடும் மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 8 பேர் காயம் அடைந்தனர். 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கடந்த 17-ம் தேதி முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் வாகன பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் மாலை செய்துங்கநல்லூரில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

இரவு 9.30 மணியளவில் உடன்குடி சந்தையடி தெருவில் திறந்த வேனில் நின்றபடி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பேசினார். அப்போது பாஜகவினர் திரண்டு வைகோவுக்கு கருப்பு கொடி காட்டினர். பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக வைகோ தொடர்ந்து அவதூறு கருத்துகளை கூறி வருவதாக குற்றம்சாட்டி, வைகோவுக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு பாஜகவினர் வைகோவின் வாகனத்தை நோக்கி வந்தனர்.

இருதரப்பும் கடும் மோதல்

இதையடுத்து வைகோவுடன் வந்த மதிமுக தொண்டரணியினர் வாகனங்களில் இருந்து இறங்கி பாஜகவினரை நோக்கிச் சென்றனர். அப்போது கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது கூட்டத்தில் சிலர் திடீரென கல்வீசினர். வைகோவின் வாகனம் மீதும் சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் உருவானது. இதையடுத்து போலீஸார் லேசான தடியடி நடத்தி இருதரப்பினரையும் விரட்டியடித்தனர்.

கல்வீச்சில் இருதரப்பிலும் சிலர் காயமடைந்தனர். அவர்கள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

வைகோவுக்கு கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, பாஜக மாவட்ட செயலாளர் சிவமுருகன் ஆதித்தன் உள்ளிட்ட 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். வைகோ உடன்குடியை விட்டு சென்றதும் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். பாஜக மாவட்ட செயலாளர் சிவமுருகன் ஆதித்தன் அளித்த புகாரின் பேரில் மதிமுகவினர் 15 பேர் மீதும் குலசேகரப்பட்டினம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருமாவளவன் கண்டனம்

இதுகுறித்து கோவையில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “வைகோவின் பயணத்தின்போது கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வன்முறை வெறியாட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x