புதுச்சேரி | அரசு பள்ளிகளில் 12ம் வகுப்பில் சிறப்பிடம் பிடித்தோரை கவுரவித்து விருந்தளித்த போலீஸார்

புதுச்சேரி | அரசு பள்ளிகளில் 12ம் வகுப்பில் சிறப்பிடம் பிடித்தோரை கவுரவித்து விருந்தளித்த போலீஸார்
Updated on
1 min read

புதுச்சேரி: அரசு பள்ளிகளில் 12ம் வகுப்பில் சிறப்பிடம் பிடித்தோரை பெற்றோருடன் காவல்நிலையம் வரவழைத்து போலீஸார் கவுரவித்து விருந்தளித்தனர்.

புதுச்சேரி மாநிலம் திருபுவனை காவல்நிலை சரகத்திலுள்ள திருபுவனை கலைஞர் அரசு மேனிலைப்பள்ளி, திருவண்டார்கோயில் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி ஆகியவற்றியில் 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த ஆறு மாணவ, மாணவியரை காவல்நிலையத்துக்கு பெற்றோருடன் வரவழைத்து பேனா, திருக்குறள் பரிசளித்து பொன்னாடை போர்த்தி போலீஸார் கவுரவித்தனர்.

அதையடுத்து ஆறு மாணவ, மாணவியரிடம் அரசு பணிகளில் சேர்ந்து உயர்ந்த நிலைக்கு வர இயலும் என குறிப்பிட்டனர். பின்னர் மாணவ, மாணவிகள், அவரது பெற்றோரை அமரவைத்து தமிழர் பராம்பரியப்படி தலைவாழை இலைப்போட்டு சைவ உணவை போலீஸார் பரிமாறினார்.

இது தொடர்பாக எஸ்ஐ இளங்கோவிடம் கேட்டதற்கு, "கிராமத்தில் அரசு பள்ளியில் படித்து காவல்துறையில் சேர்ந்தோர் நான் உட்பட பலருண்டு. அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை ஊக்குவித்தால் தங்கள் நிலையிலிருந்து உயர்ந்து அரசு பணியில் சேர முடியும் என எடுத்துரைக்க எங்கள் பகுதியிலுள்ள அரசு பள்ளியில் சிறப்பிடம் பிடித்தோரை அழைத்து கவுரவித்தோம். கிராமப்பகுதியில் இருக்கும் இவர்களை ஊக்குவித்தால் அடுத்த நிலைக்கு உயர்வார்கள்." என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in