Published : 08 May 2024 06:00 AM
Last Updated : 08 May 2024 06:00 AM

விதிகளை மீறி நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்; 5 நாட்களில் 1,200 வழக்குகள் பதிவு: ரூ.6 லட்சம் அபராதம் வசூலிப்பு

சென்னை: சென்னையில் விதிமுறைகளை மீறி வாகனபதிவு எண் பலகை (நம்பர் பிளேட்) வைத்திருந்ததாக 5 நாட்களில் 1,200 வழக்குகள் பதியப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னையில் அண்மைக்காலமாக, மோட்டார் வாகனசட்ட விதிமுறைகளின்படி வாகன பதிவு எண் பலகையை பொருத்தாமல், பல்வேறு அளவுகள் மற்றும் வாசகங்களுடன் பதிவு எண் பலகையை பொருத்தியும், பொதுமக்களில் சிலர் அரசு வாகனம் (ஜி, அ), காவல், வழக்கறிஞர், மனித உரிமைகள் ஆணையம், பத்திரிகை, ஊடகம் உட்பட இதுபோன்று பல துறைகளைச் சார்ந்த ஸ்டிக்கர்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி ஒட்டி முறைகேடாக பயன்படுத்தி வருவதாக காவல் துறைக்கு புகார்கள் தொடர்ந்து வந்தன.

இதை கருத்தில் கொண்டுவிதிமுறைகளை மீறி அரசின் சின்னங்கள், முத்திரைகள், குறியீடுகள், அரசியல் கட்சிகளின் சின்னங்கள், மருத்துவர், வழக்கறிஞர்கள் முத்திரைகள், ஊடகங்களின் பெயர்கள் உள்ளிட்ட ஸ்டிக்கர்கள் வாகன பதிவெண் பலகையில் ஒட்டப்பட்டால் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை கடந்த 27-ம் தேதி அறிவித்தது.

இதன்படி கடந்த 2-ம் தேதி முதல் சென்னையில் வாகன பதிவு எண் பலகையில் விதிமுறைகளை மீறி ஸ்டிக்கர் ஒட்டியிருந்தவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவர்களிடமிருந்து தலா ரூ.500 அபராதமாக வசூலிக்கப்பட்டது. முதல்முறை வழக்குப் பதியப்பட்ட பின்னரும் வாகனபதிவு எண் பலகையை சரி செய்யாமலும், அபராதத்தை செலுத்தாமலும் இருந்தால் சம்பந்தப்பட்ட வாகனம் மீண்டும் பிடிபட்டால் ரூ.1,500 அபராதம் வசூலிக்கப்பட்டது.

நடவடிக்கை தீவிரமாகும்: மே 2-ம் தேதி முதல் மே 6-ம் தேதி வரையில் 5 நாள்களில் இந்த விதிமுறை மீறல் தொடர்பாக 1,200 வழக்குகள் பதியப்பட்டு, சுமார் ரூ.6 லட்சம்அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாக சென்னை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

வரும் நாட்களில் இந்த வகை விதிமுறை மீறலில் ஈடுபடுவோர் மீதான நடவடிக்கை இன்னும் தீவிரப்படுத்தப்படும் என போக்குவரத்து போலீஸார் எச்சரித்துஉள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x