Published : 08 May 2024 06:15 AM
Last Updated : 08 May 2024 06:15 AM

‘நான் முதல்வன்’ திட்டத்தில் இன்று முதல் மே 13 வரை உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி

சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரிக் கனவு நிகழச்சி, இன்று முதல் 13-ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: 12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சியை கடந்த 2022 ஜூன் 25-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கடந்த 2022-23 கல்வியாண்டில் அரசு பள்ளியில் பயின்று 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 3,30,628 மாணவர்களில் உயர்கல்விக்கு வழிகாட்டுதல் மூலமாக 2,43,710 மாணவர்கள் மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல், சட்டம், பாலிடெக்னிக் மற்றும் இதர உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த பிப். 29-ம் தேதி கோயம்புத்தூரில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ‘கல்லூரிக் கனவு 2024’ நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதையடுத்து, மாவட்ட வாரியாக ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.

அதன்படி, மே 8-ம் தேதி (இன்று) சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், மதுரை, திருநெல்வேலி, சேலம் மாவட்டங்களில் நடைபெறுகிறது. இதில் சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா பங்கேற்கிறார்.

தொடர்ந்து, மே 9-ம் தேதி (நாளை) திருவள்ளூர், நீலகிரி, பெரம்பலூர், மயிலாடுதுறை, திண்டுக்கல், தருமபுரி மாவட்டங்களிலும், மே 10-ம் தேதி செங்கல்பட்டு, திருப்பூர், அரியலூர், கடலூர், தேனி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரியிலும், 11-ம் தேதி காஞ்சிபுரம், ஈரோடு, தஞ்சாவூர், விழுப்புரம், விருதுநகர், தூத்துக்குடி, திருப்பத்தூரிலும், மே 13-ம் தேதி ராணிப்பேட்டை, தென்காசி, நாமக்கல், கரூர், திருவாரூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x