Published : 08 May 2024 04:04 AM
Last Updated : 08 May 2024 04:04 AM

குமரி அருகே ராட்சத அலையில் சிக்கி இறந்த பயிற்சி மருத்துவர்களின் உடல்கள் ஒப்படைப்பு

கடல் அலையில் சிக்கி உயிரிழந்த பயிற்சி மருத்துவர்களுக்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ மாணவர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் லெமூர்கடல் பகுதியில் ராட்சத அலையில் சிக்கிஇறந்த பயிற்சி மருத்துவர்கள் 5 பேரின்உடல்கள் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருச்சியில் தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு முடித்து,பயிற்சி மருத்துவர்களாக இருந்து வந்த 17 பேர் கடந்த 5-ம் தேதி நாகர்கோவிலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இவர்களில் 8 பேர் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள லெமூர் கடற்கரைக்கு நேற்று முன்தினம் சென்றனர். அங்கு கடற்கரையில் நின்றிருந்த போது, உயரமாக எழுந்த ராட்சத அலையில் சிக்கினர். இதில் பிரவின்சேம், காயத்ரி, சாருகவி,சர்வதர்ஷித், வெங்கடேஷ் ஆகிய 5 பயிற்சி மருத்துவர்கள் உயிரிழந்தனர்.

அதிர்ச்சியில் மயக்கமடைந்த 3 பயிற்சி மருத்துவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். உயிரிழந்த பயிற்சி மருத்துவர்களின் உடல்கள், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு, அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அவர்களது பெற்றோர் கதறி அழுதது அங்கிருந்தோரை கண்கலங்கச் செய்தது.

துபாயில் இருந்து வருகை...: கன்னியாகுமரி மாவட்டம் பறக்கையைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர் சர்வதர்ஷித்தின் உடலை துபாயில் இருந்துவந்த அவரது பெற்றோர் நேற்றுபெற்றுக்கொண்டனர். சர்வதர்ஷித்தின் தந்தை பசுபதி, தாயார் ஜெய சந்திரா ஆகியோர் கடந்த 25 ஆண்டுகளாக துபாயில் வசித்து வருகின்றனர். பசுபதி அங்குள்ள கார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். சர்வதர்ஷித்திற்கு 6-ம் வகுப்பு படிக்கும் சகோதரர் உள்ளார். சர்வதர்ஷித் 12-ம் வகுப்பு வரை துபாயில் படித்துள்ளார். அதன் பின் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் படித்துள்ளார்.

மவுன அஞ்சலி: முன்னதாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாக அலுவலகம் முன்பு மருத்துவ கல்லூரி மாணவர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை டீன் பிரின்ஸ் பயஸ், கண்காணிப்பாளர் அருள் பிரகாஷ் மற்றும் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x