Published : 30 Apr 2018 03:14 PM
Last Updated : 30 Apr 2018 03:14 PM

தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க உறுதியேற்போம்: அரசியல் தலைவர்கள் மே தின வாழ்த்து

மே தினத்தை முன்னிட்டு முதல்வர், துணை முதல்வர், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

முதல்வர், துணை முதல்வர் கூட்டாக வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

“உலகம் உழைப்பவர்களாலேயே வாழ்கிறது. அதனால் அது உழைப்பவர்களுக்கே சொந்தமானது. இத்தைகைய பெருமையையும் சிறப்பினையும் கொண்ட உழைப்பாளர்கள் தங்களுக்குள் வேற்றுமை பாராட்டாது ஒன்றுபட்டு உழைக்க வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். தங்களின் கடின உழைப்பால் வீட்டையும், நாட்டையும் உயர்த்திடும், தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த மே தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறோம்.”

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:

“தற்போதைய மத்திய அரசு தொழிலாளர் வர்க்கத்தின் மீது மோசமான தாக்குதலைத் தொடுத்து வருகிறது. போராடிப் பெற்ற தொழிற்சங்க உரிமைகள், தொழிலாளர் நலச் சட்டங்கள், அனைத்தும் குப்பைக் கூடையில் வீசி எறிந்து இருக்கிற மத்திய அரசு, தற்போது ‘வேலை வரம்பு ஒப்பந்தம்’ (Fixed Term Employment)’ என்ற பெயரில் சட்டத் திருத்தம் கொண்டுவர டிசம்பர் 2017-ல் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

ஒப்பந்தத் தொழிலாளர்கள் முறையை அறவே ஒழிக்க வேண்டும் என்று சட்டப்பூர்வமாக தொழிற்சங்கங்கள் போராடி வரும் நிலையில், ஒப்பந்த முறையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் நிரந்தரத்தன்மை கொண்ட பணிகள் அனைத்தும் ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றன.

ஒப்பந்தத் தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சிவிட்டு தூக்கி எறியும் வகையில் ‘வேலை வரம்பு ஒப்பந்தம்’ என்ற பெயரில் மத்திய அரசு சட்டத்திருத்தம் மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது.

தியாகம் செய்து பெற்ற உரிமையைப் பேணிப் பாதுகாக்கவும், தொழிலாளர் வர்க்கம் ஓரணியில் நின்று போராடவும் இந்த மே நாளில் உறுதியை மேற்கொள்வோம்.

உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர் அனைவருக்கும் இதயமார்ந்த மே நாள் வாழ்த்துகள்.”

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:

“உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையைக் குறிக்கும் மே தினத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மே தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். உழைக்கும் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகுப்புவாதத்தை முறியடிக்க மே தினத்தில் உறுதியேற்போம் என அனைவரையும் அறைகூவி அழைக்கிறோம்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு தொழிலாளர் உரிமைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறித்து வருகிறது. அதன் தாராளமயப் பொருளாதாரக் கொள்கையின் காரணமாகப் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுவதாலும், சிறு குறு தொழில்கள் நசிவடைவதாலும் லட்சக்கணக்கானவர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகின்றன. இந்தச் சூழலில் நீண்ட நெடும் போராட்டங்களினால் வென்றெடுக்கப்பட்ட தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க உறுதியேற்போம்.”

பாமக நிறுவனர் ராமதாஸ்:

“தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த மகிழ்ச்சியை நம்மால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. மத்திய அரசும், மாநில அரசும் புதிய ஓய்வூதியச் சட்டம் போன்றவை தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பதையே முக்கிய நோக்கமாக கொண்டிருக்கின்றன.

பாட்டாளிகளுக்கு வேலை வழங்குவதற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது. ஊதியத்தில் பாகுபாடு காட்டப்படுவதைக் கண்டித்து போராட்டம் நடத்திய அரசுப் பள்ளிகளின் இடைநிலை ஆசிரியர்களில் ஒரு பிரிவினர் மிக மோசமான அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டனர். பாட்டாளிகளை எப்போது வேண்டுமானாலும் வேலையில் அமர்த்தலாம்; எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டு அனுப்பலாம் என்ற நிலை தான் இந்தியாவில் காணப்படுகிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் பாட்டாளிகளுக்கு தமிழகத்திலும், இந்தியாவிலும் எந்த அங்கீகாரமும், பணிப் பாதுகாப்பும் இல்லை. அதனால் அவர்கள் உரிமைகளைக் கோர முடியாமல் அடிமைகளாக வாழும் சூழலுக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையை மாற்றுவதற்காக பாட்டாளிகளும், பொதுமக்களும் இணைந்து மீண்டும் ஒரு உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.”

கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்:

“மத்தியில் ஆளும் பாஜக அரசு, நவீன தாராளமயமாக்கல் கொள்கை என்கிற பெயரில் ஏழை மக்களை ஒன்றுமில்லாதவர்களாக மாற்றி பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளை கொழுக்க வைப்பது உள்ளிட்ட அட்டூழியங்களில் ஈடுபடுகிறது.

தொழிலாளர் நலச்சட்டங்களை நீர்த்துப்போகச் செய்வதன் மூலம் தொழிலாளர்கள் போராடிப்பெற்ற உரிமைகள் பறிக்கப்படுகின்றன. அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகின்றன.

தமிழக அரசு தொழிலாளர் உரிமைகளைப் பறிப்பது, ஜனநாயக போராட்டங்களை முடமாக்குவதிலேயே குறியாக உள்ளது. தமிழகத்தில் வேலை வாய்ப்புகள் பறிக்கப்படுவதுடன், காண்ட்ராக்ட், ஒப்பந்த தொழில்முறையால் தொழிலாளர்கள் ஈவு இரக்கமின்றி சுரண்டப்படுகின்றனர்.

நவீன தாராளமயமாக்கல் கொள்கையை முறியடித்து, மாற்றுக்கொள்கையின் அடிப்படையில் முன்னேற , மதவெறி சக்திகளை பின்னுக்குத்தள்ளி, மக்கள் ஒற்றுமை, மதச்சார்பின்மை போன்ற விழுமியங்களைப் பாதுகாக்க, உழைக்கும் மக்களை ஒன்றுதிரட்டி போராட்டக் களத்தை விரிவாக்கிட மே தினத்தில் உறுதியேற்போம்.”

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்:

உலகம் முன் எப்போதுமில்லாத வகையில் நிதி மூலதனத்தாலும், ஏகாதிபத்திய நாடுகளின் தலையீடுகளாலும் கடும் பதற்றத்திற்கும், சுரண்டலுக்கும் ஆட்பட்டு உள்ளது.

இந்தியாவில் என்றுமில்லாத வகையில் உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. வேலை உத்தரவாதம், ஊதிய உயர்வு, வைப்புநிதி உள்ளிட்ட தொழிலாளர் பாதுகாப்பு திட்டங்கள் யாவும் மத்திய அரசால் பறிக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசு மத்திய அரசின் தவறான கொள்கைக்கு துணைபோகிறது. இத்தகைய சூழலில், சுரண்டலற்ற, சாதிமத பேதமற்ற, புதியதோர் உலகம் செய்ய அனைவரும் உறுதி ஏற்போம்.”

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:

“தொழிலாளர்கள் வருடத்தில் ஒரு நாள் மட்டுமே நினைத்துப் போற்றப்பட வேண்டியவர்கள் அல்ல. வருடம் முழுவதும் நினைத்து பாராட்டப்பட வேண்டியவர்கள். அவர்கள் மேலும் உழைப்பதற்கு தேவையான ஆரோக்கியமான சூழல், தொழில் சார்ந்த கல்வி பயிற்றுவித்தல், மனதில் உற்சாகம், குடும்ப நிம்மதி இவற்றை உறுதி செய்யும் வகையில் அரசாங்கங்கள் செயல்படவேண்டியது அவசியமாகிறது.”

இவ்வாறு தலைவர்கள் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x