Published : 07 May 2024 11:16 AM
Last Updated : 07 May 2024 11:16 AM

‘இந்துக்கள் உரிமை பாதிப்பு’ - புதிய யானை வழித்தட பரிந்துரைக்கு இந்து முன்னணி எதிர்ப்பு

கோவை மாவட்டம் மருதமலை கோயில்

தமிழக அரசு இந்து கோயில்களை மட்டும் குறி வைத்து சீரழிப்பதாகவும், தமிழக வனத்துறையும். யானை வழித்தட வரைவு அறிக்கை என்ற பெயரில் பக்தர்களை வஞ்சிப்பதாகவும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார். யானைகளை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் இந்துக்களின் உரிமைகளை பறிக்கும் புதிய யானை வழித்தட பரிந்துரையை தமிழக அரசு ஏற்க கூடாது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருதமலை, வெள்ளியங்கிரி மலை உட்பட தமிழகத்தின் பல கோயில்களுக்கு சிக்கல் ஏற்படுத்த திட்டமிட்ட சதி அரங்கேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் 42 யானை வழித்தடங்களை கண்டறிந்தாக ஒரு வரைவு அறிக்கையை தமிழக வனத்துறை வெளியிடப்பட்டுள்ளது. அதில் நீலகிரி, கோவை, ஆனைமலை, அகஸ்திய மலை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஐந்து யானைகள் காப்பகம் உள்ளிட்ட 20 வனக்கோட்டங்களில் 2023 ஆம் ஆண்டு அறிக்கையின்படி யானைகளின் எண்ணிக்கை குறைவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

யானை வழித்தடங்களை மறைக்கிறார்கள் என்ற பெயரில் பல கோயில்களுக்கு பக்தர்கள் செல்வதற்கு இடையூறு ஏற்பட்டுத்த சதி நடப்பதாக அறிகிறோம்.

உதாரணமாக நெல்லை மாவட்டம் அகஸ்தியர் அருவி செல்லும் வழியில் உள்ள சொரிமுத்தையனார் கோயில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் வருவதால் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதே போல் கோவை மாவட்டத்தில் வனத்தில் இருக்கும் கோயில்கள்
அதாவது யானைகள் வழித்தடம் என்று வனத்துறை சொல்லும் கோயில்கள் வீரகாளியம்மன் கோயில்,
கொடிவேலி அம்மன், பத்ரகாளி அம்மன், பூண்டி வெள்ளிங்கிரி போன்ற கோயில்களுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதிக்கிறது.

ஆனால் அதே பகுதியில் அமைந்துள்ள பிரச்சினைக்குரிய காருண்யா நிறுவனம் உள்ள பகுதியில் யானை வழித்தடங்கள் காலங்காலமாக உள்ளன. ஆனால் கிறித்தவர்கள் போட்ட பிச்சையால் வந்ததாக பெருமை பேசும் திமுக அரசின் தலையீட்டால் அவற்றை எல்லாம் இந்த வனத்துறையும் தமிழக அரசும் கண்டு கொள்ளவில்லை.

மாறாக முறையாக ஆன்மீகப் பணியாற்றும் இயற்கை வளத்தை பாதுகாக்க விழிப்புணர்வு சேவைப் பணியில் ஈடுபட்டு வரும் ஈஷா மையத்தின் மீது பல குறைகளை தொடர்ந்து சொல்லி வருகிறது.

மேலும் உலகப்புகழ் பெற்ற மருதமலை திருக்கோவிலில் யானை வழித்தடம் என்ற பெயரில் பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றனர். இதில் தான் சதியின் பின்னணியை இந்துக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். சென்னிமலையை கிறித்துவ மலையாக மாற்றுவோம் என கிறித்துவ மதத்தினர் பகிரங்கமாக பேசியபோது திமுக அரசு வாயை திறக்கவில்லை. அதன் அடுத்த குறியாக கொங்கு மண்டலத்தில் உள்ள முருகபக்தர்கள் ஏழாம் படைவீடாக கொண்டாடும் மருதமலையை வனத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து வழிபாட்டினையும் கோடிக்கணக்கான முருக பக்தர்கள் காவடி எடுத்தும் வணங்கி போற்றி வருவதை தடுக்க திமுக அரசு வனத்துறையை ஏவி இக்கோவிலை யானை வழித்தடம் என அறிவிக்க வைத்துள்ளது என அஞ்சுகிறோம். இதனை அனுமதித்தால் ஒவ்வொரு முருகனின் படை வீட்டிற்கும் ஆபத்தை இந்த திமுக அரசு ஏற்படுத்தும் என்பதை இந்துக்கள் உணர வேண்டும்.

கல்கொத்தி - வாளையாறு யானை வழித்தடத்தில் அமைந்துள்ள காருண்யா நிறுவனத்தால் யானை உள்ளிட்ட வன விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 1,200 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள காருண்யா நிறுவனம் யானை வழித்தடத்திற்குள் வராது.

ஆனால், பல நூறு வருடங்களாக இந்துக்கள் லட்சக்கணக்கில் சென்று வழிப்படும் கோயில்கள் மட்டும் யானை வழித்தடத்தில் வரும்? இது எந்த வகையில் நியாயம்? தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு ஒரு சட்டம்? கிறிஸ்தவர்களுக்கு வேறு சட்டமா?

எடுத்துக்காட்டாக திமுக அரசு பதவியேற்றதில் இருந்து சாலை விரிவாக்கம், ஆக்கிரமிப்பு, நீதிமன்ற தீர்ப்பு என காரணங்களை காட்டி நூற்றுக்கணக்கான கோயில்களுக்கு மாற்று இடம் கூட தராமல் பக்தர்கள் மனம் பதற அநாகரிகமாக இடித்து தள்ளியது. அதே சமயம் வேறு மதத்தினர் வழிபாட்டு இடங்களுக்கு இந்நிலை ஏற்படுத்தியதா? நீதிமன்ற தீர்ப்பு ஆக்கிரமிப்பு காரணங்கள் அங்கு மட்டும் எப்படி செல்லாமல் போகிறது? நாத்திக திமுக அரசுக்கு இந்துக்கள் மீதான வெறுப்பு என்பதுதான் காரணமாக?

யானைகளை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் இந்துக்களின் உரிமைகளை பறிக்கும் புதிய யானை வழித்தட பரிந்துரையை தமிழக அரசு ஏற்க கூடாது.

தொடர்ந்து இதே போன்று தமிழகத்தின் முக்கிய கோயில்களான மருதமலை, பூண்டி போன்ற கோயில்களுக்கு பக்தர்கள் செல்வதற்கு இடையூறு ஏற்பட்டால் பக்தர்களை திரட்டி இந்து முன்னணி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் என தெரிவித்துக் கொள்கிறோம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x