Published : 23 Apr 2018 09:28 PM
Last Updated : 23 Apr 2018 09:28 PM

எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்: ரஜினி பேட்டி

தெரிந்து செய்திருந்தாலும், தெரியாமல் செய்திருந்தாலும் பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் எஸ்.வி.சேகர் கூறிய கருத்து மன்னிக்க முடியாத குற்றம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் மருத்துவப் பரிசோதனைக்காக சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் செல்லும் முன் அவரது போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ''என்னுடைய தனிப்பட்ட பயணமாக நான் அமெரிக்கா புறப்படுகிறேன். 10-15 நாட்களில் சென்னை திரும்புவேன்.

சீருடையில் இருக்கும் போலீஸார் மீது எப்போது தாக்குதல் நடத்தினாலும் அது கண்டிக்கத்தக்கது. மன்னிக்க முடியாத குற்றம். சட்டம் கையில் இருக்கிறது என்பதற்காக போலீஸார் வரம்புமீறி நடந்துகொண்டால் அதுவும் கண்டிக்கத்தக்கது.

துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி எனது 25 ஆண்டுகால நண்பர். அவரை சந்திப்பது வழக்கமானது. அரசியலில் இறங்கிய பிறகு விமர்சனங்கள் வரத்தான் செய்யும். பொது வாழ்க்கையில் அதனைத் தவிர்க்க முடியாது. நான் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி. அதற்கான தேதி இன்னும் முடிவு செய்யவில்லை. ராகவேந்திரா மண்டபத்தில் கட்சி தொடர்பாக நடந்து வரும் ஆலோசனைகளை வெளிப்படையாகக் கூற முடியாது.

அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளை பேராசிரியர் நிர்மலா தேவி தவறான பாதைக்கு அழைத்த அவமானகரமானது. வெட்கப்பட வேண்டிய விஷயம். விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.

தெரிந்து செய்திருந்தாலும், தெரியாமல் செய்திருந்தாலும் பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் எஸ்.வி.சேகர் கூறிய கருத்து மன்னிக்க முடியாத குற்றம்'' என்று ரஜினி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x