Published : 07 May 2024 06:04 AM
Last Updated : 07 May 2024 06:04 AM

முறையாக பராமரிக்காத, உரிமம் பெறாத நாய்களின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

சென்னை: நுங்கம்பாக்கம் பூங்காவில் சிறுமி ஒருவரை வளர்ப்பு நாய்கள் கடித்ததில் அவர் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவை அதே பகுதியில் வசிக்கும் புகழேந்தி - தனலட்சுமி தம்பதியர் வளர்த்து வந்த நாய் என்பதும், அவர்களின் அஜாக்கிரதையால் இச்சம்பவம் நிகழ்ந்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று சம்பவம் நடைபெற்ற பூங்கா பகுதியில் ஆய்வுசெய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசால் தடை செய்யப்பட்ட 23 இன நாய்களில் இந்த ராட்வீலர் நாய் ரகமும்ஒன்று. நாய் வளர்ப்பு ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கில், இந்ததடைக்கு பல்வேறு உயர் நீதிமன்றங்களில் இடைக்கால தடைதற்போது விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ள சட்டங்கள், விலங்குகள் நல விதிகள் விலங்குகளுக்கு சாதமாக உள்ளன. ஓர் இடத்தில் பிடிக்கப்படும் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவைசிகிச்சை செய்த பிறகு, பிடித்த இடத்திலேயே விட வேண்டும் என்று தான் விதிகள் உள்ளன. வேறு நடவடிக்கைகளில் மாநகராட்சி ஈடுபட்டால் கடும் தண்டனைக்கு உள்ளாக நேரிடும். இந்த நடைமுறைகள் மாநகராட்சிக்கு சவாலாக உள்ளன.

சிறுமியை கடித்த நாய்க்கு மாநகராட்சியிடம் உரிமம் பெறவில்லை. இதற்காக உரிமையாளருக்கு நோட்டீஸ் கொடுத்து விசாரிக்க இருக்கிறோம். நாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளுக்கு மாநகராட்சி பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பிராணிகளிடமிருந்து மக்களை காப்பதில் சட்ட சிக்கல்கள் உள்ளன. இது தொடர்பாக அரசு மற்றும் உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரு நாய்களை, தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் அப்புறப்படுத்தி பராமரிக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம். உரிமையாளர்கள் முறையாக பராமிக்காததால் தான் பல இடங்களில் பிரச்சினைகள் வருகின்றன. நாய்களை விட அவற்றின் உரிமையாளர்கள் தான்மோசமாக நடந்து கொள்கிறார்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் விலங்குகளின் உரிமையாளர்களின் கடமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதிலிருந்து உரிமையாளர்கள் தவறுகின்றனர். அதற்காக தான் நாய்களுக்கு உரிமம் பெறுவதை கட்டாயமாக்கி இருக்கிறோம்.

நாய்களால் பாதிக்கப்பட்டவர்கள், நாய்களின் உரிமையாளர்கள், நாய் ஆர்வலர்கள், கால்நடைத் துறை, விலங்குகள் நலவாரியம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து உரிய தீர்வுகாண மாநகராட்சி முயற்சிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பூங்காக்களில் வளர்ப்பு நாய்களுக்கு கட்டுப்பாடு: சென்னை மாநகராட்சி பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை கொண்டுவர புதிய கட்டுப்பாடுகளை விதித்து, ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். பூங்காக்களின் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும். வளர்ப்பு நாயின் உரிமையாளர், ஒரு நபர் ஒரு நாயை மட்டுமே பூங்காக்களுக்குள் அழைத்து வர வேண்டும்.

நாயின் கழுத்தில் கயிறு, யாரையும் கடிக்காத வகையில் வாயில் கவசம் கட்டாயம் அணிவித்திருந்தால் மட்டுமே பூங்காவுக்குள் அனுமதிக்க வேண்டும். அந்த நாய்களுக்கு தடுப்பூசி போட அறிவுறுத்துவதுடன் கட்டாயம் மாநகராட்சி உரிமம் பெறச்செய்ய வேண்டும். தெரு நாய்கள் மற்றும் கயிறு கட்டப்படாத நாய்களை பூங்காக்களுக்குள் அனுமதிக்கக்கூடாது. பூங்காவில் குழந்தைகள் விளையாடும் பகுதியில் நாய்களை அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x