

சென்னை: சென்னையில் கோடை வெப்பத்தில் இருந்து வாகன ஓட்டிகளை காக்க 10 போக்குவரத்து சிக்னல்களில் பசுமை நிழற்பந்தல்கள் அமைக்க இருப்பதாக மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு கோடை காலம் பிறந்த நிலையில் நாடு முழுவதும் வெப்ப அலை வீசி வருகிறது. கடலோர பகுதியான சென்னை மாநகரத்திலும் கடந்த ஒரு மாதமாக கடும் வெப்பம் வாட்டி வருகிறது. பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியில் வரவே அஞ்சி வருகின்றனர். உடல் உழைப்பு தொழிலாளர்கள், கடும் வெயிலுக்கு நடுவே வேலை செய்து சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு கடும் வெயிலில் வேலை செய்த 25 வயது கொத்தனார் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு, அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் கோடை வெப்பத்தை தணிக்க மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளை வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில், ரிப்பன் மாளிகை அருகில் ராஜா முத்தையா சாலை - ஈ.வெ.ரா.பெரியார் சாலை சந்திப்பு, திருமங்கலம் ரவுண்டானா சிக்னல், நியூ ஆவடி சாலை - கீழ்ப்பாக்கம் -3வது அவென்யூ சந்திப்பு, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை - கீழ்ப்பாக்கம் - சேத்துப்பட்டு சிக்னல், அடையாறு எல்.பி. சாலை - மேற்கு அவென்யூ சாலை சந்திப்பு, திருவான்மியூர், பழைய மாமல்லபுரம் சாலை உள்ளிட்ட 10 இடங்களில் பசுமை நிழற்பந்தல்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 3 தினங்களுக்குள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
குடிநீர் வசதி: மேலும் வெப்பத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க 199 இடங்களில் மாநகராட்சி சார்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 297 இடங்களில் 37 ஆயிரம் ஓ.ஆர்.எஸ். கரைசல் பாக்கெட்கள் 1 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.