

நாகர்கோவில்: கடல் சீற்றத்தால் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்க பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கேட்டுக்கொண்டார்.
லெமூர் கடல்பகுதியில் அலையில் சிக்கி மீட்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவ கல்லூரி மாணவிகளை ஆட்சியர் ஸ்ரீதர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: கேரளம் மற்றும் தென் தமிழககடலோரப் பகுதிகளில் கடலில் எந்தவித அறிகுறிகளும் இன்றி, திடீரென பலத்த காற்று வீசுவதோடு, கடல் கொந்தளிப்பும் ஏற்படக்கூடும் என்று, வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. எனவே, மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், பொதுமக்கள் கடலில் குளிக்க வேண்டாம் என்றும், தாழ்வான கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும்மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டது.
இச்சூழலில் லெமூர் கடற்கரை பகுதியில் கடலில் குளிக்க சென்றபோது, தனியார் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர் 5 பேர் அலையில் சிக்கி மரணம் அடைந்தனர். 3 மாணவ, மாணவியர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது போன்ற நிகழ்வுகள் மேலும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தீயணைப்பு துறை, காவல் துறை, சுற்றுலாத்துறை, மீன்வளத் துறை ஆகிய துறைகளின் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து துறையினரும் கண் காணிப்பு பணியில் ஈடுபடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் கடற்கரை பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் உடனடியாக வைக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
கடல் சீற்றத்தினால் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்க பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கடற்கரை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் அங்கு வசிக்கும் மக்கள் கடல் அலையின் சீற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பிரின்ஸ் பயஸ், கண்காணிப்பாளர் ஜான்போஸ்கோ, உண்டு உறைவிட அலுவலர் ஜோசப்சென் ஆகியோர் உடனிருந்தனர்.