

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ குடியிருப்புகளில் நடைபெற்ற கட்டுமானப் பணியின் போது மண் சரிவில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ மையம் உள்ளது. இங்கு புதிய குடியிருப்புகள் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை கோவையைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் செய்துவரும் நிலையில், இன்று (ஏப்., 06) காலை தொழிலாளர்கள் வழக்கம் போல் பணி செய்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது திடீரென பக்கவாட்டு சுவரின் மண் சரிந்து விழுந்தது. இதில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த சக்தி (31) என்ற தொழிலாளி சிக்கிக் கொண்டார். இந்த பக்கவாட்டு மண் சுவர் இடிந்து விழுந்ததில் மண்ணில் புதைந்து சக்தி அரை மணி நேரத்துக்குப் பிறகு ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்கப்பட்டார்.
அவரை ஆம்புலன்ஸ் மூலம் வெலிங்டன் ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்தி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், சம்பவ இடத்துக்கு வந்த குன்னூர் வட்டாட்சியர் கனி சுந்தரம் மற்ற தொழிலாளரிடம் எவ்வாறு சம்பவம் நடந்தது என்று விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து விபத்து குறித்து வெலிங்டன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.