Published : 12 Apr 2018 02:48 PM
Last Updated : 12 Apr 2018 02:48 PM

தேர்தலின்போது ஆகாயத்திலேயே பறந்து ஓட்டு கேட்பாரா? - கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை எதிர்கொள்ளும் ஆற்றல் மோடிக்கு இருக்க வேண்டும்: ஸ்டாலின்

கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை எதிர்கொள்ளும் ஆற்றல் பிரதமர் மோடிக்கு இருக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசினார்.

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப் பேரணியின் ஒரு பகுதியாக, வல்லம்படுகை ஊராட்சியில் திரண்டிருந்த பொதுமக்களிடையே இன்று ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

''திருச்சி மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து இரு குழுக்களாக தொடங்கிய காவிரி உரிமை மீட்புப் பயணம் இன்று மாலை கடலூரில் சங்கமித்து, அங்கு மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. காவிரி விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், நமது உரிமைகளை மீட்க வேண்டும், உச்ச நீதிமன்றம் காவிரி வழக்கில் அளித்துள்ள உறுதியான, இறுதியான தீர்ப்பை மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு ஏற்றுக் கொண்டு, உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், அதற்கு மாநிலத்தில் உள்ள அதிமுக அரசு உரிய அழுத்தம் அளிக்க வேண்டும் என்பதற்காக, அனைத்து கட்சிகளின் சார்பில் பலவித போராட்டங்களை நடத்தப்பட்டு, அதனைத் தொடர்ந்து இந்தப் பயணம் நடைபெறுகிறது.

எங்களுடைய இந்தப் பயணத்துக்கு தமிழக விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் உள்பட ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஆதரவளித்து, எங்களுக்கு ஊக்கமளித்து, உற்சாகப்படுத்தும் வகையில் ஆரவாரமாக, எழுச்சியாக, உணர்வுபூர்வமாக வரவேற்பளித்து வருகின்றனர். குறிப்பாக, மாநிலத்தில் நடக்கும் ஆட்சி மீதும், மோடி தலைமையிலான மத்திய ஆட்சி மீதும் ஒட்டுமொத்த தமிழக மக்களும் கடும் கோபத்தில் இருப்பது கண்கூடாகத் தெரிகிறது.

பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும்போது, அவருக்கு கருப்புக் கொடி காட்ட வேண்டுமென்று அனைத்துக் கட்சிகளின் சார்பில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம். அதுமட்டுமல்ல, தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி பறக்க வேண்டும், கருப்பு உடையணிந்து, கருப்புப் பட்டைகளை அணிந்து, பிரதமர் மோடி வரும் நாள் நமக்கெல்லாம் ஒரு துக்க நாளாக, கருப்பு நாளாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், நாம் எடுத்து வைத்த வேண்டுகோளை இன்றைக்கு தமிழ்நாட்டு மக்கள் நிறைவேற்றித் தந்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கின்றபோது, நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன்.

அதேநேரத்தில், தமிழகத்தை இருட்டாக்கும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டிருக்கிறார். தமிழகத்தை ஒரு பாலைவனமாக்க வேண்டுமென்று திட்டமிட்டு, மத்தியில் இருக்கின்ற ஆட்சி செயல்படுகிறது. அதற்கு மாநிலத்தில் இருக்கின்ற ஆட்சி துணை நிற்கும் கொடுமையும் நடந்து கொண்டிருக்கிறது. நியாயமாக, நாம் கருப்புக் கொடி காட்டுகிறோம் என்றால், அதை எதிர்க்கக்கூடிய ஆற்றல் அவர்களுக்கு இருக்க வேண்டும். இந்தியாவின் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஜவகர்லால் நேரு, இந்த நாட்டின் பிரதமராக இருந்தபோது, தமிழ்நாட்டுக்கு வருகை தந்து, சென்னை விமான நிலையத்தில் இறங்கிய நேரத்தில், அவருக்கு நாம் கருப்புக் கொடி காட்டியிருக்கிறோம். அதுமட்டுமல்ல, இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, அவருக்கும் நாம் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். அவர்கள் எல்லாம் அதனை எதிர்கொண்டார்கள், நம்முடைய கண்டனத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்ற வரலாறை நாம் அறிந்திருக்கிறோம்.

இன்றைய பிரதமர் மோடி நியாயமாக என்ன செய்திருக்க வேண்டும்? விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக நிகழ்ச்சிகளுக்கு காரில் சென்றிருக்க வேண்டும். கருப்புக் கொடி போராட்டத்தை சந்திக்கத் தயார் என்று சொல்லி, அதை கடைப்பிடித்து இருக்க வேண்டும். சென்னையில் இருந்து புறநகர் பகுதியான திருவிடந்தை அதிக தூரம் என்பதை ஏற்றுக்கொண்டு, அங்கு ஹெலிகாப்டரில் செல்வதை தவறென்று வாதிட விரும்பவில்லை. ஆனால், கிண்டியில் ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. விமான நிலையத்தில் இருந்து கிண்டிக்கு 5 முதல் 10 நிமிடத்தில் சென்றுவிடலாம். அதிலும், பிரதமர் வருகிறார் என்றால், போக்குவரத்தை முழுமையாக நிறுத்திவிட்டு, 2 முதல் 5 நிமிடங்களில் கிண்டிக்கு சென்று சேர்ந்துவிடலாம்.

ஆனால், அங்கு செல்ல காரில் வர பயந்து, சாலையில் பயணிக்கப் பயந்து, இரவோடு இரவாக அந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஒரு ஹெலிபேட் உருவாக்கி, விமான நிலையத்தில் இருந்து கிண்டிக்கும் ஹெலிகாப்டரில் சென்று இறங்குகிறார். இப்படிப்பட்ட நிலையில் ஒரு பிரதமர் இருக்கிறார். நான் கேட்கிறேன், இப்போது ஆகாயத்திலேயே பறந்து கொண்டிருந்தாலும், தேர்தல் வருகின்ற நேரத்தில் நீங்கள் கீழே இறங்கி வந்துதான் தீரவேண்டும்? அதை நீங்கள் மறந்து விடக்கூடாது.

தேர்தலின்போது ஆகாயத்திலேயே பறந்து ஓட்டு கேட்பீர்களா? அப்போது கீழே இறங்கி வந்துதான் தீரவேண்டும். என்னதான் பறவைகள் உயர உயர பறந்து கொண்டிருந்தாலும், இரை தேடி கீழே வந்துதான் தீரவேண்டும். எனவே, எதையும் பார்க்க வேண்டாம், எதையும் தெரிந்து கொள்ள வேண்டாம் என்று ஆகாயத்திலேயே பறந்து கொண்டிருந்தால், 'பூனை கண்ணை மூடிக்கொண்டு, பூலோகமே இருண்டு விட்டது என்று கருதும்' என்பதுபோன்ற நிலை அவருக்கு ஏற்பட்டு இருக்கிறது.

ஆகவே, நான் தெளிவோடு, துணிவோடு சொல்ல விரும்புகிறேன், இன்று எங்களுடைய இந்த எழுச்சிப் பயணம், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பயணம் நிறைவடையும் நிலைக்கு வந்திருக்கலாமே தவிர, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுகின்ற வரையிலும் எங்களுடைய போராட்டம் ஓயாது'' என்று ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x