Published : 05 May 2024 04:00 AM
Last Updated : 05 May 2024 04:00 AM

4 பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு விருது - ஏசிஜே இதழியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

ஆசிய இதழியல் கல்லூரி சார்பில் சிறந்த ஊடகவியலாளர் விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் பத்திரிகையாளர்கள் தபசியா, நிதின் சேத்தி, அகிலேஷ் பாண்டே மற்றும் புகைப்பட கலைஞர் சுதீப் மைதிக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் பேசுகிறார் ஊடக மேம்பாட்டு அறக்கட்டளையின் அறங்காவலர் என்.முரளி. அருகில் ஆசிய ஊடகவியல் கல்லூரி தலைவர் சஷி குமார், டீன் குஷ்பு நாராயணன், கலாச்சார செயற்பாட்டாளரும், இலக்கிய வாதியுமான ஜி.என்.தேவி, விருது தேர்வாளர் குழுவினரான ராகுல் ஜேக்கப், கவுதம் பாட்டியா, அம்மு ஜோசப் உள்ளிட்டோர். படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: ஏசிஜே இதழியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் 4 பத்திரிகையாளர் களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

‘தி இந்து’ குழுமத்தின் ஊடக மேம்பாட்டு அறக்கட்டளையின் கீழ் சென்னை தரமணியில் ஆசிய இதழியல் கல்லூரி ( ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் - ஏசிஜே ) இயங்கி வருகிறது. இக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா மற்றும் ஏசிஜே விருது வழங்கும் விழா அக்கல்லூரி கலையரங்கில் நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில், சிறந்த புலனாய்வு பணிக்காக பத்திரிகையாளர்கள் தபசியா, நிதின் சேத்தி ஆகியோருக்கு ஏசிஜே புலனாய்வு இதழியல் விருதும், பத்திரிகையாளர் அகிலேஷ் பாண்டேவுக்கு கே.பி.நாராயண குமார் நினைவு சமூக மாற்ற இதழியல் விருதும், புகைப் படக் கலைஞர் சுதீப் மைதிக்கு ஆஷிஷ் யெச்சூரி நினைவு புகைப்பட இதழியல் விருதும் வழங்கப்பட்டன.

இந்த விருதுகளை விருது தேர்வாளர் குழுவினரான ராகுல் ஜேக்கப், கவுதம் பாட்டியா, அம்மு ஜோசப் ஆகியோர் வழங்கினர். அதைத் தொடர்ந்து கலாச்சார செயற்பாட்டாளரும், இலக்கியவாதியுமான ஜி.என்.தேவி,ஊடகங்கள் நடுநிலை தன்மையுடன் செயல்படுவது தொடர்பான தலைப்பில் ‘லாரன்ஸ் தனா பிங்காம் நினைவு சொற்பொழிவை’ ஆற்றினார்.

நிகழ்வில் ஊடக மேம்பாட்டு அறக்கட்டளையின் அறங்காவலர் என்.முரளி பேசும்போது, “ஏசிஜே கல்லூரி ஒவ்வொரு காலகட்டத்துக்கு ஏற்ப, பாடத் திட்டம் மற்றும் கற்பித்தல் முறைகளை சிறப்பாக மாற்றிக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வருகிறது. இங்கு படித்த மாணவர்கள் முன்னணி ஊடக நிறுவனங்களில் உயர்ந்த பொறுப்புகளில் திறம்பட பணியாற்றி வருகின்றனர். சிலர் ஊடகம் சார்ந்த தொழில்களில் சொந்தமாக ஈடுபடுகிறார்கள்.

இன்றைய தினம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளை விடவும் இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் பின் தங்கிய நிலையில் உள்ளது. இந்நிலை மாற வேண்டும். வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பிறகு டீப்-ஃபேக் வீடியோ போன்றவை மூலம் தவறான கருத்துகள் எளிதாக பரப்பப்படுகின்றன. செய்தியாளர்கள் தங்களுக்கு கிடைக்கும் செய்திகளை நன்கு பகுப்பாய்வு செய்து உறுதிப் படுத்தி செய்திகளை வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

அறக்கட்டளை மற்றும் ஏசிஜே கல்லூரியின் தலைவர் சசிகுமார் அறிமுக உரையாற்றினார். விழாவில், அச்சு, தொலைக்காட்சி, வானொலி மற்றும் ஆன்லைன் தொடர்பான இதழியல் டிப்ளமோ படிப்புகளில் மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். முன்னதாக, ஏசிஜே கல்லூரியின் டீன் நளினி ராஜன் வரவேற்றுப் பேசினார். நிறைவாக, புளூம்பெர்க் திட்டத்தின் டீன் குஷ்பு நாராயண் நன்றி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x