Published : 27 Apr 2018 08:28 AM
Last Updated : 27 Apr 2018 08:28 AM

உடல்நலம் குன்றியதால் உளறுகிறார் திவாகரன்: டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு

திவாகரன் உடல் நலம் குன்றி உளறிக்கொண்டு இருக்கிறார் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறினார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மாநில அரசின் நலனுக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாகவும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தங்களின் சுயநலனுக்காகவே அவர்கள் மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த நிலையில் அவர்களால் எப்படி 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற முடியும். 234 தொகுதிகளிலும் அதிமுக தோல்வி அடையும். முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தாலும் தெரிவிப்பேனே தவிர, தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டேன் என திவாகரன் கூறியுள்ளதாக கூறினார்கள். திவாகரனுக்கு கடந்த 2002-ம் ஆண்டு முதல் உடல்நிலை சரியில்லை. அதனால், அவர் உளறிக்கொண்டு இருக்கிறார் என்றார்.

மன்னார்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது, “திவாகரன் கூறியதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நடந்ததை அரசியலாகவே நினைக்கவில்லை. என் உறவினர் யாரோ ஒருவர் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை பொதுச் செயலாளர் மற்றும் என் மீது வெளிப்படுத்தியதாகவே கருதுகிறேன்” என்றார்.

சிபிஐ விசாரணைக்கு வரவேற்பு

புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் நேற்று செய்தியாளர்களிடம் தினகரன் கூறியது: குட்கா வழக்கை சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. சசிகலாவின் சகோதரர் என்பதைத் தவிர கட்சிக்கும் திவாகரனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x