Published : 04 May 2024 05:42 AM
Last Updated : 04 May 2024 05:42 AM

உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து

கோப்புப்படம்

சென்னை: உலக பத்திரிகை சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் முழு அளவில் பேணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 1992-ம் ஆண்டு வின்ட்ஹோக்கில் ஆப்பிரிக்க நாளிதழ் செய்தியாளர்கள் ஒன்றிணைந்து பத்திரிகை சுதந்திரம் குறித்து அறிக்கை வெளியிட்டனர். அதன் நினைவாக, மே 3-ம் நாளை ஐக்கிய நாடுகள் அவையின் பொதுப்பேரவை உலகப் பத்திரிகை சுதந்திர நாளாக 1993-ம் ஆண்டு பிரகடனப்படுத்தியது. இந்த நாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தலைவர்களின் வாழ்த்து விவரம்:

முதல்வர் மு.க.ஸ்டாலின்: தமிழகத்தை பொறுத்தவரை பத்திரிகைச் சுதந்திரம் முழு அளவில்பேணப்படுகிறது. கடந்த 2021-ல் திமுக அரசு பொறுப்பேற்றபோது, உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கரோனா தொற்று காலத்தில், செய்தியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்துப் பல்வேறு உதவிகள் அளிக்கப்பட்டன.

கரோனா ஊக்கத்தொகை ரூ.3 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டது. இழப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டது. பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்கப்பட்டு 3,223உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், குடும்ப உதவித்தொகை ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளன.

சிறந்த பத்திரிகையாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படுகிறது. பத்திரிகையாளர் ஓய்வூதியம் திட்டத்தில் பணிக்கொடை, பணிக்கால ஆண்டு உச்சவரம்பு, மருத்துவ உதவித் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதே நேரம், `பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் நைந்து போயுள்ளது. பத்திரிகை சுதந்திரத்துக்கான தரவரிசையில் மிக மோசமான இடம், பல பத்திரிகையாளர்களுக்கு விடுக்கப்படும் தொடர் அச்சுறுத்தல்கள் போன்றவை பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை கவலைக்கிடம் ஆகியுள்ளதைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. பேச்சு சுதந்திரத்தின் மாண்புகளை உயர்த்திப் பிடிக்கவும் அச்சம், கொடுங்கோல் தணிக்கைமுறை இன்றி பத்திரிகையாளர்கள் பணியாற்றவும் போராட உறுதியேற்போம்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: உள்ளதை உள்ளபடி மக்களுக்கு எடுத்துக் கூறும் மக்களாட்சியின் நான்காவது தூணானபத்திரிகை துறையின் அடிப்படைஉரிமைகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் பத்திரிகை சுதந்திரம் இருக்க வேண்டும். உலக பத்திரிகை சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்: அடக்குமுறை, அச்சுறுத்தல், தாக்குதல் என பல்வேறு இக்கட்டான சூழல்களிலும் துணிச்சலுடன் பணியாற்றி மக்களுக்கான நடுநிலை செய்திகளை வழங்கி வரும் பத்திரிகையாளர் அனைவருக்கும் உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x