Published : 04 May 2024 06:15 AM
Last Updated : 04 May 2024 06:15 AM

உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடு இந்தியா: ஆளுநர் ஆர்.என்.ரவி தகவல்

சென்னை: உலக அளவில் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

திருச்சி பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் (பிம்) 32-வது பட்டமளிப்பு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமி கலையரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் மேலாண்மை படிப்புகளில் ரேங்க் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களையும், பட்டங்களையும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார். தொடர்ந்து பிம் புதிய கல்வி வளாகத்துக்கு அடிக்கல் நாட்டி அவர் பேசியதாவது:

பட்டம் பெற்றுள்ள மாணவர்களாகிய நீங்கள் இப்போது முக்கியமான காலகட்டத்துக்குள் நுழைகிறீர்கள். இன்றைய தினம் ஏராளமான புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. தற்போது நீங்கள் பார்ப்பது புதிய இந்தியா, 10 ஆண்டுகளுக்கு முன்பு கண்ட இந்தியா அல்ல. முன்பு வறுமையும் கல்வியறிவின்மையும் இருந்தது. ஆனால், இன்று டிஜிட்டல்மயமான, தன்னம்பிக்கைமிக்க, சுயசார்புள்ள புதிய இந்தியா உருவாகியுள்ளது. உலக அளவில் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

அனைத்து மக்களையும் உள்ளடக்கிய நிதி வளர்ச்சியை அடைந்துள்ளோம். 50 கோடிக்கும் மேற்பட்ட வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் வளர்ந்த உலக நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.

மற்றவர்களிடமிருந்து அறிவை கடன் வாங்காமல் நாமே அறிவை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். 2022 உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் அறிக்கையின்படி இந்தியா முன்பு இல்லாதஅளவுக்கு 21 சதவீத வளர்ச்சிஅடைந்திருக்கிறது. நமது இளைஞர்கள் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி அவற்றுக்கு காப்புரிமை பெற்று வருகிறார்கள்.

தற்போது உலக நாடுகள் தங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்கு இந்தியாவை எதிர்நோக்கியுள்ளன. இரு நாடுகளுக்கு இடையே சண்டை ஏற்படும்போது சமரசம் செய்வதற்கு அவை இந்தியாவை எதிர்பார்க்கின்றன. கரோனா காலகட்டத்தில் பல நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசிகளை வழங்கியது.

இந்தியாவில் தொழில் தொடங்கவும், முதலீடுகள் செய்யவும் உலக நாடுகள் விரும்புகின்றன. நீண்ட காலமாக நாம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு தேவையான நிதியை ஒதுக்கவில்லை. அதனால்தான் வளர்ச்சியில் முன்பு பின்தங்கியிருந்தோம். ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது.

செயற்கை நுண்ணறிவு, குவாண்டம்கம்ப்யூட்டிங், அட்வான்ஸ்டு ரோபோட்டிக்ஸ், நானோ டெக்னாலஜி உள்ளிட்ட துறைகளில் மிகப்பெரிய அளவில் முன்னேறியுள்ளோம். நாம் இன்னும் முன்னேற வேண்டியுள்ளது. அதற்கான பயணத்தை தொடங்கிவிட்டோம். இவ்வாறு ஆளுநர் பேசினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டிவிஎஸ் குழுமங்களின் தலைவர் வேணு சீனிவாசன் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக, பிம் ஆட்சிக்குழு தலைவர் ரவி அப்பாசாமி வரவேற்று அறிமுகவுரை ஆற்றினார். நிறைவாக, ஆட்சிக்குழு உறுப்பினர் சதிஷ் பராசரன் நன்றி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x