கணினி ஆசிரியர் பணிவாய்ப்பு தொடர்பான போலி விளம்பரங்களை மக்கள் நம்ப வேண்டாம்: பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை

கணினி ஆசிரியர் பணிவாய்ப்பு தொடர்பான போலி விளம்பரங்களை மக்கள் நம்ப வேண்டாம்: பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை
Updated on
1 min read

சென்னை: தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,588 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 53 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இதற்கிடையே அரசுப் பள்ளிகளில் கணினிஆசிரியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக போலிதுண்டுப் பிரசுரம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அதில், 5 ஆண்டுகள் ஒப்பந்தம், தினமும் 3 மணி நேரம் வேலை, தொகுப்பூதியம் ரூ.10,000, கல்வித் தகுதிகள், தொடர்பு எண் உட்பட பல்வேறு விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் இத்தகைய போலி விளம்பரங்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘கணினி ஆசிரியர் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் எதுவும் பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்படவில்லை. தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் விளம்பரம் போலியானது.

இதுபோன்ற மோசடி விளம்பரங்களை பட்டதாரிகள் யாரும் நம்பி ஏமாற வேண்டாம். மேலும், சந்தேகத்துக்குரிய தகவல்களை பள்ளிக்கல்வித் துறையின் இலவசஉதவி மைய எண்ணில் (14417) தொடர்புகொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in