Last Updated : 04 May, 2024 06:25 AM

 

Published : 04 May 2024 06:25 AM
Last Updated : 04 May 2024 06:25 AM

முதுநிலை படிப்பை நிறைவு செய்யும் அரசு சாரா மருத்துவர்களின் கட்டாய பணி உத்தரவாத ஒப்பந்தத்தை ரத்து செய்ய மருத்துவர்கள் கோரிக்கை

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்பை நிறைவு செய்யும் அரசுசாரா மருத்துவர்களின் கட்டாய பணிக்கான உத்தரவாத ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தின் அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் மொத்தம் உள்ள இடங்களில் 50 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போகிறது. மீதமுள்ள இடங்களில் 50 சதவீதம் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மீதமுள்ளவை பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

அகில இந்திய ஒதுக்கீடு மற்றும்பொது பிரிவு இடங்களில் சேரும்அரசுசாரா மருத்துவர்கள் தங்களதுபடிப்பை நிறைவு செய்த பிறகு 2ஆண்டுகளுக்கு அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும்.

அப்படி பணியாற்ற தவறினால், ரூ.40 லட்சம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவாத ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தது. கடந்த ஆண்டு இந்த உத்தரவாத ஒப்பந்தம் ஓராண்டு பணி அல்லது ரூ.20 லட்சம் அபராதம் என்று மாற்றப்பட்டது.

இந்நிலையில் சென்னை, ஸ்டான்லி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரிகளில் அரசுசாரா மருத்துவர்களாக பணியாற்றும் பிரியங்கா, பரத்ஜி பாபு, அம்பிகா ஆகியோர் தாங்கள் கரோனா காலகட்டத்தில் ஆற்றிய பணியை கருத்தி கொண்டு, கட்டாய பணியில் இருந்து தங்களை விடுவித்து சான்றிதழ்களை திருப்பித்தர உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்தநீதிமன்றம், உத்தரவாதம் அளித்துள்ளபடி அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற உத்தரவிட்டது.

இதுகுறித்து அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் ஏ.ராமலிங்கம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அரசு சாரா மருத்துவர்கள் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு பொது கலந்தாய்வு மூலம் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்கின்றனர். ஆனால், அகிலஇந்திய கலந்தாய்வு மூலம் வெளிமாநில மருத்துவர்கள் தமிழகத்தில் சேர்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர். இதற்கு இந்த ஒப்பந்தமே முக்கிய காரணமாக உள்ளது.

படிப்பை நிறைவு செய்பவர்களுக்கு ஏதாவது ஒரு அரசு மருத்துவமனையில் பணி வழங்கப்படுகிறது. படித்தது ஒரு இடம், ஒப்பந்த பணி ஒரு இடமாக இருப்பதால், அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். கரோனா காலத்தில் பணியாற்றியதை கணக்கில் கொள்ள கோரியது ஒன்றும் தவறு இல்லை.

ஏ.ராமலிங்கம்

அரசுசாரா மருத்துவர்களுக்கு கட்டாய பணி என்பது உழைப்பு சுரண்டல்தான். பல அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்களை நியமிக்காமல், இந்த மருத்துவர்களை வைத்தே சரி செய்துவிடுகின்றனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உதவி பேராசிரியர் பதவிக்கு கீழ் உள்ள உறைவிட மருத்துவர் பணியிடங்கள் குறைவாகஉள்ளன. அந்த உறைவிட மருத்துவர் பணியிடங்களில், அரசுசாரா மருத்துவர்களை ஒப்பந்தப்படி ஓராண்டு பணியாற்ற சொல்லலாம்.

அல்லது ஒப்பந்த முறையை முழுவதுமாக ரத்து செய்துவிட்டு, முதுநிலை மருத்துவப் படிப்பை நிறைவு செய்பவர்களுக்கு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் அரசு மருத்துவமனைகளில் பணி வழங்கலாம். இவ்வாறு ஏ.ராமலிங்கம் தெரிவித்தார்.

அரசு சாரா சேவை மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் என்.கார்த்திகேயன் கூறியதாவது: முதுநிலை மருத்துவ படிப்புகளில், அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு மற்றும் நீட் தேர்வில் ஊக்க மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஆனால், அரசுசாரா மருத்துவர்களுக்கு எவ்வித சலுகையும் இல்லை.

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சொந்த முயற்சியில் சேர்கிறார்கள். படிக்கும் காலத்தில் அரசு மருத்துவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், அரசுசாரா மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்படுகிறது. அந்த தொகையும், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குறைவாக வழங்கப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருந்த காலத்தில், உத்தரவாத ஒப்பந்தம் முறை கொண்டுவரப்பட்டு கட்டாய பணி வழங்கப்பட்டது. இன்றைய நிலையில் அந்த பிரச்சினை அரசு மருத்துவமனைகளில் இல்லை.

கார்த்திகேயன்

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான பணியிடங்கள் காலியாக இல்லை. எம்பிபிஎஸ் முடித்துவிட்டு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசு பணிக்காக காத்திருக்கின்றனர். நிலைமை இப்படி இருக்கும்போது, அரசுசாரா மருத்துவர்களுக்கு எதற்காக கட்டாய பணிக்கு உத்தரவாத ஒப்பந்தம் போடப்படுகிறது.

அதுவும், கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற சொல்கின்றனர். அங்கு எம்பிபிஎஸ் படித்தவர்கள் செய்யும் வேலையை இதயம், எலும்பு, நரம்பியல், நுரையீரல் என தனித்தனியாக படித்தவர்களை பொதுமருத்துவம் பார்க்க சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர்.

அதேபோல், படிப்பை நிறைவு செய்தவர்களின் சான்றிதழை கொடுக்காமல் வைத்திருப்பது மனித உரிமைமீறல் ஆகும். அதனால், அரசுசாரா மருத்துவர்களுக்கு கட்டாய பணிக்கான உத்தரவாத ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு என்.கார்த்திகேயன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x