

மக்களவையின் துணை சபாநாயகராக அதிமுக அவைத் தலைவர் தம்பிதுரை இன்று ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அவருக்கு பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் உட்பட 12 கட்சிகள் ஆதரவளித்துள்ளன.
மக்களவை தேர்தல் நடத்தை விதிமுறை பிரிவு 8-ன் கீழ் இதுகுறித்த அறிவிக் கையை மக்களவையின் தலைமை செயலாளர் பி.கே.குரோவர் திங்கள்கிழமை மாலை வெளி யிட்டார். இதன்படி, துணை சபாநாயகர் பதவிக்கு போட்டி யிடும் உறுப்பினர்கள் தங்கள் மனுக்களை செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணிக்குள் தம்மிடம் சமர்ப்பிக்குமாறு கூறினார்.
திங்கள்கிழமை மாலை அதிமுகவின் அவைத் தலை வரும், மக்களவை மூத்த உறுப்பின ருமான தம்பிதுரையும் நாடாளு மன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடுவும் சந்தித்து பேசினர். அப்போது துணை சபாநாயகர் பதவிக்கு மனு அளிக்குமாறு தம்பிதுரையிடம் வெங்கய்ய நாயுடு கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சி களிடம் தம்பிதுரையை ஒருமனதாக தேர்ந்தெடுக்கும்படி வெங்கய்ய நாயுடு கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து செவ்வாய்க் கிழமை தலைமை செயலாளரிடம் தம்பிதுரை தனது மனுவை அளித்தார். திருச்சி தொகுதி அதிமுக எம்.பி. குமார், தம்பிதுரையின் பெயரை முன்மொழிய, ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன் வழிமொழிந்தார். பாஜக சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்மொழிய, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வழிமொழிந்தார். காங்கிரஸ் சார்பில் அதன் அவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்மொழிந்து, ஜோதிர்ஆதித்ய சிந்தியா வழிமொழிந்தார்.
தம்பிதுரைக்கு ஆதரவாக தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம், சிவசேனா, லோக்ஜன சக்தி ஆகியவையும், எதிர்க்கட்சிகளில் பிஜு ஜனதா தளம், தெலங்கானா ராஷ்டிர சமிதி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.