

அரூர்: தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் மோளையானூர் ஊராட்சியில் மோளையானூர், பூனையானூர், முள்ளிக்காடு, தேவராஜபாளையம் ஆகிய கிராமங்கள் உள்ளன. ஊராட்சியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இக்கிராமத்துக்கு போதிய அளவில் குடிநீர் விநியோகம் இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டு கின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வாணியாறு அணை அமைந்துள்ளது. வாணியாறு அணை நீர் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வசதி செய்யப்பட்டு வந்தது. தற்போது அணை வறண்டு விட்டதால், குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் குடிநீரும் குறைவாக வழங்குவதால் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பூனையானூரில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், 192 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் இல்லாததால் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவல நிலையில் உள்ளனர். வாணியாறு அணைப் பகுதியில் உள்ள கிணற்றை தூர் வாரியோ அல்லது புதிய கிணறு வெட்டியோ வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மக்களுக்கும், ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் சீராக குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.