தி.நகர் ரங்கநாதன் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

தி.நகர் ரங்கநாதன் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநகரின் முக்கிய வர்த்தக மையமாக தியாகராய நகர் உள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான துணிக்கடைகள், நகைக் கடைகள், பாத்திரக்கடைகள், மளிகை மற்றும் காய்கறி கடைகளுடன் இணைந்த ஒருங்கிணைந்த வணிக வளாகங்கள் குளிர்சாதன வசதியுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் குடும்பத்தோடு தியாகராய நகரில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்க அதிக அளவில் வருகின்றனர். இதனால் அங்குள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக ரயில் நிலையத்திலிருந்து வரும் பொதுமக்கள் தியாகராய நகரின் பல்வேறு பகுதிகளுக்கு ரங்கநாதன் தெரு, நடேசன் சாலை, ரயில்வே பார்டர் சாலை ஆகியவற்றில் நடந்து செல்கின்றனர். இதனால் அச்சாலைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

அவர்களைக் கவரும் வகையில் அச்சாலைகளில் உள்ள பெரும்பாலான கடைகளுக்கு வெளியே உள் வாடகைஅடிப்படையில் சாலையை ஆக்கிரமித்து பழச்சாறு, கரும்புச் சாறு, வேக வைத்த மக்காச்சோளம், ஐஸ் கிரீம் விற்பனை கடைகள் மற்றும் மலிவு விலை துணி விற்பனை செய்யும் சாலையோர கடைகள் தற்போது அதிகமாக முளைத்திருக்கின்றன.

இதனால் ரங்கநாதன் தெருவில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்து, பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு வந்த புகார் அடிப்படையில் நேற்று மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்றன. இதில் சுமார் 56 ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர்.

இதேபோன்று மெரினா வளைவு சாலையில், சாலையோரம் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கொட்டகைகளையும் மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in