Published : 03 May 2024 06:43 AM
Last Updated : 03 May 2024 06:43 AM
சென்னை: பண்டைய தமிழர்கள் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படைகளைக் கொண்டு போர் புரிந்ததாக வரலாற்று ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் வேகமாக இலக்கை அடையும் படையாக குதிரைப்படை இருந்துள்ளது.
ஆங்கிலேயர் ஆதிக்கத்தின்கீழ் சென்னை வந்தபோது, அவர்களின் நிர்வாகத்தில் குதிரைகள் பெரும் பங்காற்றின. சென்னையில் ஆங்கிலேய ஆளுநர்களின் பாதுகாப்புக்காக1780-ம் ஆண்டில் குதிரைப்படை உருவாக்கப்பட்டது. பின்னர் 1800-ம் ஆண்டுமுதல் அப்போதைய மாநகரக் காவல்கண்காணிப்பாளர் வால்டர் கிராண்ட் என்பவரால் காவல்துறை பணிக்கு குதிரைப்படை ஈடுபடுத்தப்பட்டது.
அதன்படி, புதுப்பேட்டை, வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி,வேப்பேரி, பூக்கடை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை ஆகிய 7 காவல் நிலையங்களில் குதிரைப்படை பிரிவு உருவாக்கப்பட்டது.
100-வது ஆண்டு நிறைவு விழா: மோட்டார் வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்த நிலையில், அனைத்துகாவல் நிலையங்களிலும் குதிரைப்படைகள் திரும்பப் பெறப்பட்டு விட்டன.அதேநேரம், 1926-ம் ஆண்டு முதல் புதுப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்ட குதிரைப்படை மட்டும் இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது, 2026-ம் ஆண்டு 100-வது ஆண்டை நிறைவு செய்ய உள்ளது.
புதுப்பேட்டை குதிரைப்படை, நூற்றாண்டு விழாவைக் கொண்டாட இருக்கும் வேளையில், புதிதாக டெல்லி ராணுவப் படையில் இருந்து8 குதிரைகளை அரசு வாங்கியது.மேலும், ரூ.3 கோடியில் பழைய லாயங்களை புதுப்பித்தல் மற்றும் புதிய லாயங்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குதிரைப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொழில்நுட்பங்கள் வளர்ந்த இன்றைய காலத்திலும், கடற்கரையில் ரோந்து பணி, விழாக்கால பாதுகாப்பு பணி, ஊர்வலப் பாதுகாப்பு பணி போன்றவற்றில் சென்னை காவல் குதிரைப்படை ஈடுபடுத்தப்படுகிறது. சிறப்பு தினங்களான சுதந்திர தினம்,குடியரசு தினம், காவலர் நினைவுநாள் போன்ற நாட்களில் சிறப்பு அணிவகுப்பில் குதிரைப்படை பங்கேற்று வருகிறது. பல்வேறு போட்டிகளில் பங்கேற்று இதுவரை 50 பதக்கங்களைதமிழ்நாட்டுக்காக பெற்றுக்கொடுத்துள்ளது.
இப்படையில் உள்ள குதிரைகளுக்கு கேரட், கொண்டைக்கடலை, கொள்ளு, நொறுக்கிய ஓட்ஸ் மற்றும் மீன் எண்ணெய் உள்ளிட்ட சத்தான உணவுகள் தினமும் 4 வேளைதரப்படுவதாக உதவி ஆய்வாளர் பாண்டி தெரிவித்தார். கோடை காலத்தில் குதிரைகளைப் பராமரிப்பதற்காக ஏசி வசதிகள் கொண்ட லாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குதிரைப்படையில் பெண் போலீஸார்: சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் துணை ஆணையர் தேஷ்முக் சேகர்சஞ்சய் கீழ் இயங்கும் குதிரைப்படையில் தற்போது 25 குதிரைகள் பராமரிக்கப்படுகின்றன. குதிரை பராமரிப்பில் 2 பெண்கள் உட்பட 24 போலீஸார் மற்றும் 16 குதிரை பராமரிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குதிரைப்படை காவலர் சுகன்யா கூறும்போது, "13 ஆண்டுகளாக நான் குதிரைப்படையில் இருக்கிறேன். 2020-ம் ஆண்டு நடைபெற்ற அகில இந்திய தேசிய போலீஸ் மீட் குதிரையேற்ற போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் வென்றேன். இப்போட்டியில் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமை எனக்கு கிடைத்துள்ளது.
போலீஸாருக்கான அகில இந்திய அளவில் நடைபெறும் குதிரையேற்றப் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் காலை முதல்மாலை வரை கடும் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். நிச்சயம் தமிழகத்துக்கு பதக்கம் வென்று தருவேன்" என உறுதிபட கூறினார்.
குதிரைப்படை காவலர் ஆர்.மணிகண்டன் கூறும்போது, “நான் இந்தகுதிரைப்படையில் 10 ஆண்டுக்கும் மேலாகப் பணிபுரிந்து வருகிறேன். என்குதிரை பிரின்ஸ் வலியன்ட். இது 15 பரிசுகளை பெற்றுள்ளது. குதிரைகளுடன் இருக்கும்போதும், சவாரிகள் செய்யும்போதும் உலகத்தையே மறந்துவிடுகிறோம்” என்றார்.
- ஆ.ரோஷினி / சீ.ஹரிணி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT