

சென்னை: தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் நிலையங்களில் அடுத்த ஆண்டில் 180 புதிய தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் வாயிலாக முன்பதிவு இல்லாத டிக்கெட் பெறும் வசதி சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. கரோனா பாதிப்பின்போது, இந்த சேவை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, ரயில்சேவை தொடங்கிய பிறகு, தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் படிப்படியாக தொடங்கப்பட்டது.
தெற்கு ரயில்வேயில் தற்போது 166 இடங்களில் 353 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் உள்ளன. அதிகபட்சமாக, சென்னை ரயில்வே கோட்டத்தில் 63 இடங்களில் 128 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் இருக்கின்றன. பல்வேறு இடங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், பயணிகள் வசதிக்காக, தெற்கு ரயில்வேயில் புதியதாக 180 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அடுத்த ஆண்டில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில் நிலையங்களில் எளிதாக டிக்கெட் எடுக்கும் விதமாக, தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. டிக்கெட் எடுக்க கவுன்ட்டரில் நீண்ட வரிசையில் நிற்காமல், இதன் மூலமாக எடுத்து கொள்ளலாம். இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இதையடுத்து, 100-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் புதியதாக 180 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்படஉள்ளன.
ஒப்பந்தப்புள்ளி வெளியீடு: தெற்கு ரயில்வேயில் 47 ரயில் நிலையங்களில் 100 தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் நிறுவ கடந்த மாதம் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டது. அதிகபட்சமாக தாம்பரம், மாம்பலம் ஆகிய ரயில்நிலையங்களில் தலா 6 தானியங்கிடிக்கெட் வழங்கும் இயந்திரங்களும், வேளச்சேரி, கிண்டி ஆகிய ரயில் நிலையங்களில் தலா 5 இயந்திரங்களும், எழும்பூர், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் தலா 4 இயந்திரங்களும் நிறுவப்படும்.
இதுதவிர, திண்டிவனம், காஞ்சிபுரம், திருத்தணி, அரக்கோணம், பட்டாபிராம், மயிலாப்பூர், சேப்பாக்கம், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, கும்மிடிப்பூண்டி, தரமணி, திருவொற்றியூர், அத்திப்பட்டு, உள்ளிட்ட ரயில் நிலையங்களில் தேவைக்கு ஏற்றார் போல, ஒன்று முதல் 3 இயந்திரங்கள் நிறுவப்படும். இதுதவிர, பல்வேறு இடங்களில் டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் நிறுவ முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.