சென்னை கடற்கரை - வேலூர் கண்டோன்மென்ட் ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு சேவை தொடங்கியது

சென்னை கடற்கரை - வேலூர் கண்டோன்மென்ட் ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு சேவை தொடங்கியது
Updated on
1 min read

சென்னை: சென்னை கடற்கரை - வேலுார் கண்டோன்மென்ட் பயணிகள் ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு சேவை நேற்று தொடங்கியது. சென்னை கடற்கரை – வேலுார் கண்டோன்மென்ட் வரை தினசரி இயக்கப்படும் பயணிகள் ரயில், திருவண்ணாமலை வரை நீட்டிக்கவேண்டும் என்று பயணிகள், பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த ரயிலை திருவண்ணாமலை வரை நீட்டிப்பு செய்ய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இந்த நீட்டிப்பு ரயில் சேவை மே 2-ம் தேதி முதல் தொடங்கும் என்று தெற்கு ரயில்வே கடந்த வாரம் அறிவித்தது.

இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக, இந்த ரயில் சேவைநீட்டிப்பு ஒத்திவைப்பதாக நேற்று முன்தினம் தெற்கு ரயில்வே அறிவித்தது. இதனால், ரயில் பயணிகள் அதிருப்தியடைந்தனர்.

இதையடுத்து, தெற்கு ரயில்வே உயரதிகாரிகளை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் சிலர் நேற்று சந்தித்து பேசினர். அப்போது, திருவண்ணாமலை வரை நீட்டிப்பு சேவையை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதைத் தொடர்ந்து, சென்னை கடற்கரை - திருவண்ணாமலை நேரடி பாசஞ்சர் ரயில் சேவை முன்பு திட்டமிட்டபடி தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சென்னை கடற்கரை - வேலூர் கண்டோன்மென்ட் ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு சேவை நேற்று மாலை தொடங்கியது. பல்வேறு குழப்பங்களுக்கு இடையே ரயில் சேவை மீண்டும் தொடங்கியதால், பயணிகள் உற்சாகமடைந்தனர்.

சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் இந்த பயணிகள் ரயில், வேலுார் கண்டோன்மென்ட்டை இரவு 9:35 மணிக்கு அடையும். அங்கிருந்து இரவு 9:40 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலையை அடையும். திருவண்ணாமலையில் இருந்து மறுநாள் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு வேலுார் கண்டோன்மென்டை அதிகாலை 5:40 மணிக்கு அடையும்.

அங்கிருந்து புறப்பட்டு, காலை 9:50 மணிக்கு சென்னை கடற்கரையை அடையும். சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே கட்டணம் ரூ.50 ஆகும். பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, இந்த ரயில் சேவையை எந்தவித தடையுமின்றி இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in