

சென்னை: ஆதரவின்றி தவித்த முதியவரை மீட்ட காவல் அதிகாரிகளுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் பாராட்டு தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கோட்டக்கரையில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஜெகந்நாதன் (70) என்பவர் ஆதரவின்றி மருத்துவ வசதி கோரிதவித்து வருவதாக வழக்கறிஞர் ஒருவர் மூலம் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவர் ஆணைய புலனாய்வு பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் வாயிலாக திருவள்ளூர் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ஹரிகுமாரை தொடர்பு கொண்டார்.இதன் தொடர்ச்சியாக கும்மிடிப்பூண்டி சரக துணை கண்காணிப்பாளர் கிரியா சக்தியின் அறிவுறுத்தலின்பேரில், உடனடியாக முதியவரை மீட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்தனர்.
இரு வாரத்தில் அவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார். இருப்பினும், அந்த மறைவையும் கண்ணியத்துடன் ஜெகந்நாதனுக்கு வழங்கியமைக்காக திருவள்ளூர் காவல்துறை அதிகாரிகளை நேரில்அழைத்து ஆணைய உறுப்பினர்கள் நீதிபதி ராஜ இளங்கோ, வீ.கண்ணதாசன் ஆகியோர் நேற்று பாராட்டினர்.
இதற்காக சென்னை, பசுமை வழிச்சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதியவரை மீட்க பங்களிப்பு செய்தமைக்காக காவல் அதிகாரிகள் ஜி.ஹரிகுமார், கே.கிரியாசக்தி, ஆய்வாளர் வடிவேல் முருகன், சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன், காவலர் ராஜேஷ்ஆகியோருக்கும், ஆணைய புலனாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் மகேஷ்வரன், துணை கண்காணிப்பாளர் சுந்தரேசன் ஆகியோருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.