Published : 10 Apr 2018 10:09 AM
Last Updated : 10 Apr 2018 10:09 AM

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சியா?: மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

தமிழக பல்கலைக்கழங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித் துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியி ருப்பதாவது:

சென்னை பல்கலைக்கழகம், சென்னை அண்ணா, சிதம்பரம் அண்ணாமலை, மதுரை காமராஜர், கோவை வேளாண் பல்கலைக்கழகங்கள், சென்னை ராணிமேரி கல்லூரி, மாநிலக் கல்லூரி போன்ற தமிழகத்தின் தனிப்பெரும் கல்வி நிறுவனங்களை மத்திய அரசு தனது அதிகாரக் குடையின்கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு ஜூன் மாதத்தில் வெளிவரும் என்றும் செய்திகள் வந்துள்ளன.

மாநில சட்டப்பேரவையால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்க ளைத் தாரை வார்க்க திரைமறைவில் ரகசியமாக மத்திய அரசுடன் அதிமுக அரசு கைகோர்த்து செயல்படுகிறதோ என்ற சந்தேகம் கல்வி யாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இது மாநில சுயாட்சி மீதும், தமிழக சட்டப்பேரவையின் அதிகாரத்தின் மீதும் நடத்தப்படும் நேரடித் தாக்குதலாகும்.

கூட்டாட்சித் தத்துவம்

பல்கலைக்கழகங்களின் நிதி, நிர்வாகம் உள்ளிட்ட அனைத்தும் மாநில உயர்கல்வித் துறை அமைச்சரிடம் உள்ளது. ஆனாலும், மாநில அரசிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக துணைவேந்தர்களை ஆளுநர் நியமிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது கூட்டாட்சித் தத்துவத்தின் ஆணிவேரில் கொதிநீரை ஊற்றுவதற்குச் சமம்.

இதுபற்றி கருத்து தெரிவிக்காமல் முதல்வர் பழனிசாமி மவுனமாக இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

மாநில சுயாட்சிக்கு முதன்முதலில் குரல் கொடுத்த மண் தமிழகம். இங்குள்ள 13 பல்கலைக்கழகங்களும் மாநில சட்டங்களின்படி தமிழகத்தின் தேவைக்கேற்ப உருவாக்கப்பட்டவை. இந்த தமிழக பல்கலைக்கழகங்களை நேரடிக் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு ஒத்திகை பார்க்கும் விபரீத விளையாட்டில் மத்திய அரசு ஈடுபட வேண்டாம் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

அதையும் மீறி செயல்பட்டால் தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை கடுமையான போராட்டத்தையும் சந்திக்க வேண்டியிருக்கும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x