ரூ.1.17 கோடி பழைய நோட்டுகளை மாற்றக் கோரி வழக்கு - ரிசர்வ் வங்கி, மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

ரூ.1.17 கோடி பழைய நோட்டுகளை மாற்றக் கோரி வழக்கு - ரிசர்வ் வங்கி, மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
Updated on
1 min read

மதுரை: ரூ.1 கோடியே 17 லட்சம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றக்கோரிய வழக்கில் ரிசர்வ் வங்கி, மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த அஜய், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: நான் பருத்தி பஞ்சு மற்றும் நூலை நூற்பாலைகளில் இருந்து வாங்கி வேறு தொழிற்சாலை களுக்கு விற்பனை செய்து வருகிறேன். முறையாக வருமான வரி செலுத்தி வருகிறேன். 2016-ம் ஆண்டில் மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது 2016 டிசம்பர் 30-ம் தேதிக்குள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி டிசம்பர் 30-ம் தேதி திருப்பூர் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் ஒரு கோடியே 17 லட்ச ரூபாயை மாற்ற சென்றேன்.

அங்கு ஏராளமானோர் வரிசையில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற காத்திருந்தனர். நானும் வரிசையில் நின்றேன். மாலை 4.30 மணி அளவில் சர்வர் பழுதாகிவிட்டதால், மத்திய அரசிடம் தெரிவித்து வரிசையில் காத்திருந்தவர்களுக்கு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற கால அவகாசம் பெற்றுத் தருவதாக வங்கி மேலாளர் தெரிவித்தார். ஆனால் அவர் கால அவகாசம் பெற்றுத் தரவில்லை. இது தொடர்பாக பல முறை ரிசர்வ் வங்கிக்கு மனு அனுப்பியும் எந்த பதிலும் வரவில்லை.

இதனால் நூல் வாங்கிய நிறுவனத்துக்கு என்னால் பணம் கொடுக்க முடியவில்லை. அந்த நிறுவனம் சார்பில் எனக்கு எதிராக கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. என் மீது 2 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. நிவாரணம் கோரி உச்ச நீதிமன்றம் சென்றதற்கு, மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் கோரி சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என உத்தரவிடப்பட்டது.

என்னிடமுள்ள ஒரு கோடியே 17 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறாவிட்டால் என்னால் பிற நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை தர முடியாது. எனவே, என்னிடம் இருக்கும் ஒரு கோடியே 17 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறபட்டிருந்தது. இந்த மனு, நீதிபதிகள் சுரேஷ் குமார், அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் டைட்டஸ், ரூ.500, ரூ.1000-த்தை மாற்ற முயற்சித்த அனைத்து ஆதாரங்கள் கொண்ட மணுக்களையும், உச்ச நீதிமன்ற உத்தரவு நகலையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து மனுதாரரின் கோரிக்கை குறித்து ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in