Published : 21 Apr 2018 08:35 PM
Last Updated : 21 Apr 2018 08:35 PM

முக நூலில் அவதூறு பதிவு: எஸ்.வி.சேகர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து முகநூலில் அவதூறாக பதிவு செய்த நடிகர் எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எஸ்.வி.சேகர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவான கருத்துகளை பதிவு செய்தார். இதில் இடம்பெற்ற கருத்துகள் ஊடகத்துறையில் பணி புரியும் பெண் செய்தியாளர்களை மிகவும் இழிவு படுத்தும் விதமாக இருந்தது. மேலும் ஆளுநருக்கு எதிர்ப்புத்தெரிவித்திருந்த பெண் பத்திரிகையாளரையும் மிகவும் இழிவுப்படுத்தி எழுதியிருந்தார்.

இதற்கு பெண் பத்திரிகையாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதையடுத்து, அப்பதிவை எஸ்.வி.சேகர் தன்னுடைய முகநூல் பக்கத்திலிருந்து அகற்றினார். “கடந்த வியாழக்கிழமை முகநூலில் திருமலை என்பவரின் கருத்தைப் படிக்காமல், தவறுதலாக என் பக்கத்தில் பகிர்ந்துவிட்டேன். சற்று நேரத்தில் அதில் உள்ள வாசகங்கள் தரக்குறைவாக இருப்பதாக என் நண்பன் சொன்னதையடுத்து உடனடியாக அப்பதிவு நீக்கப்பட்டு விட்டது.

இந்தச் சம்பவத்தால் மன வருத்தம் ஏற்பட்டுள்ள அனைத்து பெண் பத்திரிகையாளர்களிடமும் என் மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன். என்று தெரிவித்தார். ஆனால் அவரது விளக்கத்தை பத்திரிகையாளர்கள் ஏற்கவில்லை. அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்ட பெண் செய்தியாளர், பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கம், திரைப்பட பத்திரிகையாளர் சங்கம், பால்முகவோர் சங்கம் உள்ளிட்ட பலரும் புகார் அளித்தனர்.

எஸ்.வி சேகர் மீது பலத்த எதிர்ப்பும் கிளம்பியது. அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்த புகார்கள் மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் பிரிவு போலீஸார் இந்திய தண்டனைச்சட்டம் 504(பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுதல்), 505(1)(c)(குறிப்பிட்ட சமூகத்திற்கு, தனி மனிதருக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டிவிடுதல்), 509( வலைதளங்களில் பெண்களை அவமானப்படுத்தும் வகையில் பதிவிடுதல்) IPC and sec. 4 of Tamilnadu prohibition of women act.( பெண் வன்கொடுமை சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x