Published : 03 May 2024 04:12 AM
Last Updated : 03 May 2024 04:12 AM

நாகை அரசு மருத்துவமனையை ஒரத்தூருக்கு மாற்றுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாகை அரசு மருத்துவமனை முன்பு நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள்.

நாகப்பட்டினம்: நாகை அரசு மருத்துவமனையை ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்வதைக் கண்டித்து மீனவர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை புதிய பேருந்து நிலையம் அருகில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை 100 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில், நாகை மாவட்டம் ஒரத்தூர் கிராமத்தில் மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு தமிழக அரசு சார்பில் 2020-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டு, ரூ.360 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட அப்போதைய முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2022-ம் ஆண்டு முதல் மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதற்காக, நாகை அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தற்காலிகமாக செயல்பட்டு வந்தது. பின்னர், ஒரத்தூரில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 4-ம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து, நாகை அரசு தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வந்த அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளும் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு கடந்த வாரம் முழுமையாக மாற்றப்பட்டன. புற நோயாளிகள் பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவுகள் மட்டும் நாகை அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்ட இடத்திலேயே செயல்பட்டு வருகின்றன. இந்தப் பிரிவுகளும் எதிர்காலத்தில் ஒரத்தூருக்கே மாற்றப்படலாம் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, நாகை புதியபேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அரசு தலைமை மருத்துவமனை, அந்த இடத்திலேயே தொடர்ந்து இயங்க வேண்டும். நாகையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள ஒரத்தூர் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யக் கூடாது என வலியுறுத்தி வெளிப்பாளையம் வர்த்தக சங்கத்தினர், மீனவர்கள், விவசாயிகள், அரசியல் கட்சியினர் உட்பட 1,000-க்கும் மேற்பட்டோர் நேற்று நாகை மருத்துவமனை முன்பு திரண்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை வெளிப்பாளையம் வணிகர் சங்க பேரமைப்பு பொருளாளர் ரஜினி காந்த் ஒருங்கிணைத்து நடத்தினார். செயலாளர் கிஷோர், முன்னாள் எம்எல்ஏ என்ஜிகே.நிஜா முதீன் மற்றும் பல்வேறு மீனவ கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x