Published : 03 May 2024 04:14 AM
Last Updated : 03 May 2024 04:14 AM
கோவில்பட்டி: எப்போதும் வென்றான் அருகே காட்டுநாயக்கன்பட்டி கிராமத்துக்கு 15 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகிக்கப் படுவதால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிச.17, 18-ம் தேதிகளில் பெய்த மழையில், எப்போதும் வென்றான் நீர்த்தேக்கத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதி கன மழையால், எப்போதும் வென்றான், ஆதனூர், காட்டு நாயக்கன்பட்டி, மிளகுநத்தம் ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்ட பயிர்கள் முழுவதுமாக சேதமடைந்தன. இங்கிருந்த அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிந்தன. கடந்த 2 மாதங்களாக வெயில் வாட்டும்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு மேலாக கோடை வெயில் சுட்டெரிக்கிறது.
இதனால், நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. எப்போதும் வென்றான் நீர்த் தேக்கத்திலும் தண்ணீர் குறைந்து, குட்டை போல காட்சியளிக்கிறது. காட்டு நாயக்கன்பட்டி கிராமத்துக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப் படுவதால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காட்டு நாயக்கன்பட்டி கிராமத்துக்கு வரும் சீவலப்பேரி கூட்டுக் குடிநீர் திட்டக் குழாய்களில் உள்ள உடைப்பை சரி செய்து, சீராக குடிநீர் விநியோகிக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துளளனர்.
இது குறித்து, அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி குமாரவேல் கூறும்போது, ‘‘எப்பொதும் வென்றான் நீர்த் தேக்கம் மூலம் எப்பொதும் வென்றான், காட்டு நாயக்கன்பட்டி, ஆதனூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1,200 ஏக்கர் பரப்பு நிலம் பாசன வசதி பெற்று வந்தது. இந்த நீர்த்தேக்கம் தூர்வாரப்படாததால் மண் மேடாகி, ஒரு மழை பெய்தால் கூட நீர்த் தேக்கம் நிரம்பி மறுகால் பாயும் நிலை நீடித்ததால், எப்போதும் வென்றான் நீர்த் தேக்கத்தில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ள கடந்த ஆண்டு ரூ.5.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடந்து வந்தன.
எங்கள் கிராமத்தை பொருத்தவரை விவசாயமும், கால்நடை வளர்ப்பும் தான் முக்கிய தொழிலாக உள்ளது. இவற்றுக்கு தண்ணீர் அவசிய தேவையாகும். தற்போது காணப்படும் வெயில் காரணமாகநீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. காட்டுநாயக்கன்பட்டி கிராமத்துக்கு மேற்கே உள்ள கண்மாயில் எப்போதும்வென்றான் ஊரில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் கலந்து விட்டது. அதனை கால்நடைகளுக்கு கூட கொடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால், குடிநீர்த் தேவைக்கு டேங்கர் லாரி தண்ணீரை நம்பியே உள்ளோம்.கால்நடைகள் ஆங்காங்கே சீவலப்பேரி குழாய் உடைப்புகளில் இருந்து கசியும் தண்ணீரை அருந்திக் கொள்ளும்.
ஆண்டுதோறும், புரட்டாசி பருவத்தில் நெல் பயிரிடுவோம். கார்த்திகை கடைசியில் உளுந்து, பாசி மற்றும் பருத்தி, முண்டு வத்தல், வத்தல் ஆகியவை பயிரிடுவோம். இந்தாண்டு நெற்பயிர்கள் வெள்ளத்தோடு போய்விட்டன. பருத்தி, முண்டு வத்தல் பயிரிட்டோம். ஆனால், தண்ணீரின்றி அதன் மகசூலும் பொய்த்துவிட்டது.
எனவே, வரும் புரட்டாசி பருவத்துக்குள் எப்போதும்வென்றான் நீர்த்தேக்கத்தில் மறு சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கண்மாயில்சாக்கடை கழிவு நீர் கலப்பதை தடுக்கவேண்டும். காட்டுநாயக்கன்பட்டி கிராமத்துக்கு சீவலப்பேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் சீராக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்’’ என்றார் அவர்.
மூடப்பட்ட வாய்க்கால்: காட்டுநாயக்கன்பட்டி அருகே எப்போதும்வென்றான் அணைக்கு வரும் வழியில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதியில் நெற் பயிர்களுக்கு தண்ணீர் தருவதற்காக பொதுப்பணித்துறை சார்பில் வாய்க்கால் அமைத்து கொடுக்கப்பட்டது. அதனருகே தனியார் காற்றாலை நிறுவப்பட்டு, சரள் மண் கொண்டு வாய்க்கால் மூடப்பட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT