Published : 05 Apr 2018 02:36 PM
Last Updated : 05 Apr 2018 02:36 PM

முதல்வர் ஆளுநரை சந்தித்தது கபட நாடகம்: ஸ்டாலின் பேட்டி

தமிழக அரசு மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால் தான், ஆளுநர் தனி வழியில் சென்று, ஆய்வுகளை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த ஆட்சி மீது திருப்தி ஏற்பட்டிருந்தால் ஆய்வு நடத்த வேண்டிய அவசியமே அவருக்கு வந்திருக்காது. முதல்வர் ஆளுநரை சந்தித்தது கபட நாடகம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் சாலை மறியல், ரயில் மறியல் ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை அண்ணாசாலை மற்றும் மெரினா கடற்கரையில், மு.க ஸ்டாலின் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் கைது செய்யப்பட்டனர். கைதான ஸ்டாலின் உள்ளிட்டோரை காவல் துறையினர் பெரம்பூரில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர்.

 அங்கு செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசினார். அப்போது,

"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பும் மத்திய அரசு காலம் தாழ்த்திவருகிறது. அதற்கு தமிழக அரசு துணைபோகிறது. இன்றைக்கு நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறது.

இந்தப் போராட்டங்களால் தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 10 லட்சம் பேருக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே, இன்று மாலை நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டு இருந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்.

இத்தகைய போராட்டங்களால் பொதுமக்களுக்கு எந்தவிதமாக சிரமும் ஏற்படாது. இது கட்சி சார்பான போராட்டமல்ல. இந்தப் போராட்டம் அமைதியாக, அறவழியில் மிகப்பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது.

இதற்கு பிறகும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால், அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும்.

மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் ஆலோசனை கேட்டு தாக்கல் செய்திருக்கும் மனுவை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு, வரும் 9 ஆம் தேதியன்று தமிழக அரசு உரிய அழுத்தத்தை வழங்க வேண்டும்.

தமிழக அரசு மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால் தான், ஆளுநர் தனி வழியில் சென்று, ஆய்வுகளை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த ஆட்சி மீது திருப்தி ஏற்பட்டிருந்தால் ஆய்வு நடத்த வேண்டிய அவசியமே அவருக்கு வந்திருக்காது. முதல்வர் ஆளுநரை சந்தித்தது கபட நாடகம்.

பிரதமர் தமிழகம் வரும்போது கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்துவது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.

தமிழக அரசுக்கு துணிச்சலாக பதவி குறித்தும் ஆட்சி பற்றியும் கவலைப்படாமல் மத்திய அரசை கேள்வி கேட்கும் ஆற்றல் வந்தால் எல்லாக் கட்சிகளும் இணைந்து போராடும்” என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x