மேற்கு மாவட்டங்களில் சீரான குடிநீர் விநியோகித்திட ஒருங்கிணைந்து செயல்படுக: முதன்மைச் செயலர் அறிவுரை

கோவை மேட்டுப்பாளையத்தில்  நடந்த ஆய்வுக் கூட்டத்தில்  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன்
கோவை மேட்டுப்பாளையத்தில்  நடந்த ஆய்வுக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன்
Updated on
1 min read

கோவை: சீரான முறையில் குடிநீர் விநியோகித்திட அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்ட அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அரசு முதன்மைச் செயலாளர் பேசினார்.

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் சீரான முறையில் குடிநீர் விநியோகம் இல்லை என பொதுமக்கள் அடிக்கடி போராட்டம் நடத்தி வருகின்றனர். இச்சூழலில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பொதுமக்களுக்கு தடையின்றி சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக அரசு முதன்மை செயலாளர் தலைமையில் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள நகராட்சி கூட்டரங்கில் இன்று (மே 2) நடந்தது.

இக்கூட்டத்தில், முதன்மை செயலாளர் கார்த்திகேயன் பேசும்போது, “மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளி்ல் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்திடும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். புதியதாக ஆழ்குழாய்கள் அமைக்கவும், பழுதடைந்த ஆழ்குழாய் கிணறுகளை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தேவையான இடங்களில் தண்ணீர் பந்தல் கூடுதலாக அமைத்திட வேண்டும். முன்னரே அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தல்களை முறையாக கண்காணித்திட வேண்டும். கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், கோடை வெயிலில் செய்யக்கூடியவை, செய்யக் கூடாதவை குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்” என்றார்.

இதுகுறித்து நகராட்சி நிர்வாக அதிகாரிகள் கூறும்போது, “கோவையின் 1 மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள், திருப்பூரின் 1 மாநகராட்சி, 5 நகராட்சிகள், 15 பேரூராட்சிகள், ஈரோடு மாவட்டத்தின் 1 மாநகராட்சி, 5 நகராட்சிகள், 42 பேரூராட்சிகள், நீலகிரியின் 1 நகராட்சி, 11 பேரூராட்சிகள் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் குறித்து முதன்மை செயலாளர் விரிவான ஆய்வு மேற்கொண்டு, அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். மேற்கண்ட பகுதிகளில் உள்ள அணைகளின் நீர் மட்டம், நீர் இருப்பு நிலவரம், நீர் வெளியேற்றம் குறித்தும் ஆய்வு செய்தார்”, என்றனர்.

இக்கூட்டத்துக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையின் முதன்மை செயலாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர்கள் மா.சிவகுரு பிரபாகரன் (கோவை), பவன்குமார் ஜி.கிரியப்பனவர் (திருப்பூர்), சிவகிருஷ்ணமூர்த்தி (ஈரோடு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மாநகராட்சிகளின் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், தலைமை பொறியாளர்கள், நகராட்சி ஆணையர்கள், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்கள், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in