தமிழகம், புதுவையில் 20 இடங்களில் வெயில் சதம்: கரூர் பரமத்தியில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவாக 111 டிகிரி பதிவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் மே மாதம் பிறந்த உடனே பல நகரங்களில் வெப்பநிலை உச்சத்தை தொட்டுள்ளது. 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவான இடங்களின் எண்ணிக்கை நேற்று 20 ஆக உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவாக கரூர் பரமத்தியில் 111 டிகிரி, ஈரோடு, வேலூரில் 110 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. கடலோர நகரங்களான சென்னை நுங்கம்பாக்கம், புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகப்பட்டினம் ஆகியவற்றிலும் இந்த ஆண்டு முதன்முறையாக 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது.

மற்ற நகரங்களில் பதிவான வெயில் அளவுகளின்படி, திருச்சியில் 109 டிகிரி, திருத்தணியில் 108 டிகிரி, தருமபுரி, மதுரை மாநகரம், மதுரை விமான நிலையம், நாமக்கல், சேலம், திருப்பத்தூர் ஆகிய இடங்களில் 106 டிகிரி, சென்னை - மீனம்பாக்கத்தில் 105 டிகிரி, கடலூர், பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் தலா 104 டிகிரி, கோவையில் 103 டிகிரி, சென்னை - நுங்கம்பாக்கம், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் 102 டிகிரி, காரைக்கால், புதுச்சேரி ஆகிய இடங்களில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ். பாலச்சந்திரன் கூறியதாவது: பசிபிக் பெருங்கடல் பகுதியில் எல்நினோ பாதிப்புகள் தொடர்ந்து நிலவி வருகிறது. தற்போது கிழக்கு திசை காற்று வீசுவது குறைந்து, மேற்கு திசை தரைக்காற்று, தெற்கு மற்றும் தென்மேற்கு திசை தரைக் காற்று வீசத் தொடங்கி இருக்கிறது. இதனால் நேற்று பல நகரங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளது.

நேற்று அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 111 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவாக வெயில் பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு அதிகபட்சமாக 1985-ம் ஆண்டு 107 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. மேற்கூறிய காரணங்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள மண் சூடாகும் தன்மை போன்ற உள்ளூர் அளவிலான காரணங்களால் கரூர் பரமத்தியில் வெப்பநிலை அதிகரித்துள்ளது.

வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் இன்று முதல் 5-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வரை நிலவக்கூடும். இப்பகுதிகளில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நீடிக்கும். இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 104 டிகிரி, கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 102 டிகிரி பாரன்ஹீட் வரையும் இருக்கக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in