Published : 15 Apr 2018 08:45 AM
Last Updated : 15 Apr 2018 08:45 AM

தமிழகத்தில் கோடை காலத்தில் மின்வெட்டுக்கு வாய்ப்பில்லை: மின் துறை அமைச்சர் பி.தங்கமணி தகவல்

கோடை காலத்தில் தமிழகத்தில் மின் வெட்டு ஏற்பட வாய்ப்பில்லை என்று மின் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

தமிழக மின்வாரியம் சார்பில் ‘உஜாலா’ திட்டத்தின் கீழ் நடமாடும் ஊர்திகள் மூலம் எல்இடி பல்புகள் விற்பனை செய்யும் திட்டத்தின் தொடக்க விழா சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக மின் துறை அமைச்சர் பி.தங்கமணி, மின்வாரிய தலைவர் விக்ரம் கபூர், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் மேலாண் இயக்குநர் எஸ்.சண்முகம், எனர்ஜி எஃபிஷியன்சி நிறுவனத்தின் துணை பொது மேலாளர் டி.ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மின் துறை அமைச்சர் தங்கமணி நடமாடும் ஊர்திகளை கொடியசைத்து வைத்து எல்இடி பல்புகள் விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர், இந்த திட்டம் குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசின் ‘உஜாலா’ திட்டத்தின் மூலம் மின் சிக்கனத்துக்கு உதவும் எல்இடி பல்புகள் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே, மின்வாரிய அலுவலகங்களில் எல்இடி பல்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தற்போது 10 நடமாடும் ஊர்திகள் மூலம் மக்களின் இருப்பிடங்களுக்கே சென்று எல்இடி பல்புகள் விற்பனை செய்யப்பட உள்ளன.

தமிழகத்தில் உள்ள 1,477 கிராமங்களுக்கு சென்று சுமார் 7 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் எல்இடி பல்புகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். நடமாடும் ஊர்திகளில் ஒரு எல்இடி பல்பு ரூ.50-க்கு விற்பனை செய்யப்படும். இந்த திட்டம் நிறைவு பெறும்போது ஆண்டுக்கு சுமார் 5 கோடி யூனிட் மின்சாரத்தை சேமிக்க முடியும்.

தற்போது கோடைகாலம் தொடங்கி இருப்பதால் மின் தேவை அதிகரித்துள்ளது. இந்தாண்டு தமிழகத்தின் மின்தேவை 16 ஆயிரம் மெகாவாட்டை தொடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மின் தேவை எவ்வளவு அதிகரித்தாலும் அதனை சமாளிக்கும் வகையில் மின் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது.

எனவே, கோடைகாலத்தில் தமிழகத்தில் மின் தடை ஏற்பட வாய்ப்பில்லை. அதிக மின் அழுத்தம் காரணமாக சில இடங்களில் மின் தடை ஏற்பட்டாலும் அவை உடனடியாக சரி செய்யப்படும். 1912 என்ற மின்வாரிய புகார் மைய எண்ணுக்கு வரும் புகார்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x