Published : 02 May 2024 06:19 AM
Last Updated : 02 May 2024 06:19 AM

ஊடகம், வழக்கறிஞர் என துறை சார்ந்தவர்கள் வாகனங்களில் ஸ்டிக்கர் பயன்படுத்த தடை இல்லை: நம்பர் பிளேட்டில் ஒட்ட தடை நீட்டிப்பு

கோப்புப் படம்

சென்னை: ஊடகம், வழக்கறிஞர், மருத்துவர் என துறை சார்ந்தவர்கள் தங்களது வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள தடையில்லை என போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மை காலமாக தனியார் வாகனங்களில் பத்திரிகை, தலைமைச் செயலகம், மின்சாரத் துறை, காவல் துறை, மாநகராட்சி, வழக்கறிஞர், உயர் நீதிமன்றம், மருத்துவர், தீயணைப்புதுறை, காவல்துறை, முப்படை போன்ற துறைகள், நிறுவனங்களின் பெயர்கள் எழுதப்பட்டு வருவதுஅதிகரித்து வருகிறது. இதுகுறித்துபோக்குவரத்து போலீஸார் ஆய்வு செய்தபோது பலர் தங்கள்வாகனங்களில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர்களுக்கும், அவர்களுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. குறிப்பாக குற்றச் செயல்களில் தொடர்புடைய சிலர் கூட இதுபோன்ற ஸ்டிக்கர்களை ஒட்டி போலீஸாரின் கவனத்தை திசை திரும்பி நழுவினர்.

இதை தடுக்கவும், சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்களின் மதிப்பைவலுப்படுத்தும் வகையிலும் சென்னை காவல் ஆணையர் ஒப்புதலின்பேரில் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் கடந்த 27-ம் தேதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ‘குற்றம் சாட்டப்பட்டவர்களும் வாகனத்தில் ஊடகம், காவல்துறை உட்பட பல்வேறு வகையான ஸ்டிக்கர்களை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் காவல்துறையின் கடுமையான நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து விடும் நிலை உள்ளது.

எனவே, தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது. விதி மீறலில் ஈடுபடுபவர்கள் மீது இன்று முதல் மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராதம் உட்பட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பும், ஆதரவும் சம அளவில் வந்தது. ஊடகம், மருத்துவர், வழக்கறிஞர்கள் தங்கள் துறை தொடர்பாக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்கள் தங்களது வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள போக்குவரத்து போலீஸார் அனுமதி அளித்துள்ளனர். துறைக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் ஊடகம், வழக்கறிஞர், மருத்துவர் என ஸ்டிக்கர் ஓட்டினால் நடவடிக்கை பாயும். அதேபோன்று நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது என போக்குவரத்து போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால், போலீஸார் அவர்களது வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் அதை இன்று முதல் அகற்ற வாய்ப்பு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x