Published : 02 May 2024 06:05 AM
Last Updated : 02 May 2024 06:05 AM

திருவாலீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண உற்சவத்தை அறநிலையத் துறை அதிகாரிகள் கண்காணிப்பில் நடத்த உத்தரவு

சென்னை: நெற்குன்றம் திரிபுரசுந்தரி உடனுறை ஸ்ரீ திருவாலீஸ்வரர் கோயிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவத்தை அறநிலையத் துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த இந்து ஆன்மிக சேவா சமிதி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரான எம்.லிங்கேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ``எங்களது அறக்கட்டளை சார்பில் மீனாட்சி திருக்கல்யாண வைபவங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நெற்குன்றத்தில் உள்ள திரிபுரசுந்தரி உடனுறை திருவாலீஸ்வரர் கோயிலில்மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவத்தை வரும் மே 5 அன்று விமரிசையாக நடத்தகடந்த பிப்ரவரி மாதம் முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகளை மேற்கொள்ள கோயிலுக்குசென்றபோது பகல் நேரங்களில் அந்த கோயில் பெரும்பாலும் மூடப்பட்டு இருந்தது.

அது தொடர்பாக விசாரித்த போது பூந்தமல்லிநீதிமன்ற உத்தரவின் பேரில் மற்றொரு கோயிலின்செயல் அலுவலர், இந்த கோயிலுக்கும் தக்காராகநியமிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதையடுத்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தை திட்டமிட்டபடி நடத்த அறநிலையத் துறை அதிகாரிகளிடம் அனுமதி கோரியும் எந்த பதிலும் இல்லை.

எனவே, திரிபுரசுந்தரி உடனுறை திருவாலீஸ்வரர் கோயிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தை திட்டமிட்டபடி நடத்த அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும்'' எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி வி.பவானி சுப்பராயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஏ.ஆர்.ஆர்.அருண் நடராஜன் ஆஜராகி வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதி, ``மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம்தொடர்பாக திருப்பணி செய்பவர்கள் அதற்கான பட்டியலுடன் தக்காரான கோயில் செயல் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும். அவர் அந்த பட்டியலை ஆய்வு செய்து அவருடைய கண்காணிப்பில் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியை அமைதியான முறையில் நடத்த வேண்டும்.

இந்நிகழ்வில் கடவுளைத் தவிர வேறு யாருக்கும் முதல் மரியாதை தரக் கூடாது. அதேபோல மே 6 அன்று நடைபெறவுள்ள தீர்த்தவாரி உற்சவமும் தக்காரால் நடத்தப்பட வேண்டும். மனுதாரர் அறக்கட்டளையும் இதில் கலந்துகொள்ளலாம்'' எனக்கூறி வழக்கு விசாரணையை ஜூன் 25-க்கு தள்ளி வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x