Published : 02 May 2024 05:30 AM
Last Updated : 02 May 2024 05:30 AM
சென்னை: சென்னையில் நேற்று மே தினம்கொண்டாடப்பட்டது. இதை ஒட்டி கட்சி தலைமை அலுவலகங்களில் தலைவர்கள் கொடியேற்றினர். மே தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் அனைத்து உழைப்பாளர்களையும் மே தினத்தில் வாழ்த்திப் போற்றுவோம்.
மேதினியில் வாழும் உழைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க, ஒற்றுமையை உண்டாக்க மே நாளில் உறுதியேற்போம். உழைக்கும் கைகள் ஒன்று சேர்ந்து புதிய உலகம் படைப்போம்.
மே தினத்தையொட்டி சென்னைசிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் உள்ள நினைவுச் சின்னத்தில் திமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,தொமுச நிர்வாகி சண்முகம், பூச்சி முருகன் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் உள்ளநினைவுச் சின்னத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மதிமுக தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற மே தின விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கொடியேற்றினார்.
சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மேதின கொண்டாட்டத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கொடியேற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், மாநிலக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் அலுவலக செயலர் எம்.ஆர்.ரகுநாதன் கொடியேற்றினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் சிந்தாரிப்பேட்டை மே தின நினைவு சின்னத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதிமுக சார்பில் மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலைக்கு அதிமுக தொழிற்சங்க மாநிலச் செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.
கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவையின் கொடியேற்றி, மே தினம் கொண்டாடியதுடன் நலிவடைந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்.
மே தினத்தை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற மே தின விழாவில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நம்மவர் தொழிற்சங்கப் பேரவைசார்பில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.சொக்கர் தலைமையில் மே தினம் கொண்டாடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT