Published : 02 May 2024 06:20 AM
Last Updated : 02 May 2024 06:20 AM

மாநகர பேருந்து கதவு கழன்று விழுந்ததில் பெண் காயம்

கோப்புப்படம்

சென்னை: சென்னை, திருமங்கலத்தில் மாநகர பேருந்துகதவு கழன்று விழுந்ததில் பெண் காயமடைந்தார். சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 70ஏ வழித்தட எண் கொண்ட பேருந்து ஆவடி நோக்கி நேற்று இரவு சென்று கொண்டிருந்தது.

அப்போது, திருமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகில் வந்தபோது, பேருந்தின் முன்பக்க தானியங்கி கதவு திடீரென கழன்று விழுந்தது. இது பேருந்துக்காக காத்திருந்த பெண் பயணி மீது விழுந்ததில் அவர் வலிதாங்க முடியாமல் கதறினார். இதையடுத்து அருகில் இருந்து சக பயணிகள் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, கதவு, பேருந்து பெயர் பலகை போன்றவற்றை ஓட்டுநர், நடத்துநர் மறைத்து வைத்ததோடு, காயமடைந்த பெண்ணையும் சிகிச்சை முடிந்த கையோடு வீட்டுக்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பேருந்தின் உதிரி பாகம் உடைந்து விழும் சம்பவம் அரங்கேறி வருவது அனைத்து தரப்பு மக்களையும் அச்சமடையச் செய்துள்ளது. இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ஆயிரக்கணக்கான புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் தவறாமல் இடம்பெறும் அறிவிப்பை செயல்படுத்த முன்வராத திமுக அரசு, காலாவதியான மற்றும் முறையான பராமரிப்பு இல்லாத பேருந்துகளை தொடர்ந்து இயக்கி அதில் பயணிக்கும் பொதுமக்களின் உயிரோடு விளையாடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

மேலும், தமிழகம் முழுவதும் நாள்தோறும் கோடிக்கணக்கிலான பொதுமக்கள் பயணம் செய்யும் அரசுப் பேருந்துகளை முறையாக பராமரிப்பதோடு, காலாவதியான பேருந்துகளுக்கு மாற்றாக புதிய பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x