Published : 17 Jan 2014 12:00 AM
Last Updated : 17 Jan 2014 12:00 AM

ஜெயலலிதா பிரதமராவதற்கு பாஜக ஆதரவளிக்க வேண்டும்: துக்ளக் ஆசிரியர் ‘சோ’ பேச்சு

மத்தியில் எப்படி கூட்டணி அமைந தாலும் நரேந்திர மோடி பிரதமராக வேண்டும். அது முடியாவிட்டால், ஜெயலலிதா பிரதமராவதற்கு பாஜக ஆதரவு அளிக்க வேண்டும் என்று துக்ளக் ஆசிரியர் சோ கூறினார்.

துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழா சென்னை மியூசிக் அகாடமியில் செவ்வாய்க்கிழமை நடந்தது. விழாவில் சோ பேசியதாவது: தமிழகத்தில் யார் யார் கூட்டணி சேரப்போகிறார்கள் எனத் தெளிவாகவில்லை. அதிமுக - பாஜக கூட்டணி அமைவதற்கு அந்த இரு கட்சிகளுமே ஆர்வம் காட்டவில்லை. மீண்டும் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமையுமா, தேமுதிக யாருடன் சேரும், தனித்துப் போட்டியிடும் தைரியம் காங்கிரஸுக்கு உள்ளதா என்பதெல்லாம் தெரியவில்லை.

எப்படி கூட்டணி அமைந்தாலும் நரேந்திரமோடி பிரதமராக வேண்டும். அவர் பிரதமராக முடியாத சூழல் உருவானால், ஜெயலலிதா பிரதமராவதற்கு பாஜக ஆதரவளிக்க வேண்டும்.

3-வது அணி சாத்தியமல்ல

மூன்றாவது அணி சாத்தியமல்ல. காங்கிரஸ் அல்லது பாஜக ஆதரவு இல்லாமல் மத்தியில் யாராலும் ஆட்சி அமைக்கமுடியாது. பல கட்சிகளால் ஒரே அணியில் இணையமுடியாது. எனவே 3-வது அணி சாத்தியமற்றது.

திமுக கூட்டணி தோற்றால்தான் தமிழக அரசியலில் தெளிவு பிறக்கும். தேமுதிகவால் பெரிய அளவில் பலன் இருக்காது.

தமிழகத்தில் கடந்த தேர்தலில் மின் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக இருந்தது. இப்போது மின்மிகை மாநிலம் என்ற இலக்கை நோக்கி தமிழகம் முன்னேறி வருகிறது.

தீவிரவாதிகளைப் பிடித்தது, வங்கிக் கொள்ளையர்களை என்கவுன்ட்டர் செய்தது, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தது ஆகியவை அதிமுக அரசின் சாதனைகளாகும். சட்டம் ஒழுங்கு விஷயத்தில் அரசு மேலும் முனைப்பு காட்டவேண்டும். டிஜிட்டல் பேனர்கள் குறைய வேண்டும்.

ஜெயலலிதா சிறந்த நிர்வாகி

முதல்வர் ஜெயலலிதாவுக்கு நான் மிகவும் நெருக்கமானவன் என கற்பனை செய்துகொண்டு, ‘அவரிடம் அதை சொல்லவேண்டும், இதை சொல்லவேண்டும்’ என கேள்வி கேட்கின்றனர். அந்த அளவுக்கு நான் நெருக்கமானவன் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

அவரது உழைப்பு, நிர்வாகத் திறன் குறித்து சந்தேகமே வேண்டாம். முதல்வராக நிர்வாகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் அவருக்கு உள்ளது. அவர் தன்னிச்சையாக முடிவெடுக்கும் திறன் கொண்டவர்.ஆம் ஆத்மிக்கு வாக்களித்து ஏமாற வேண்டாம். டெல்லியில் 72 சதவீத மக்கள் அக்கட்சிக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர். இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளை ஆதரிக்கும் நபர்கள் அக்கட்சியில் உள்ளனர்.

டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் ஊழல் செய்ததற்கு ஆதாரமாக 360 பக்க ஆதாரங்கள் இருப்பதாகக் கூறிய கேஜ்ரிவால், தற்போது மற்றவர்களிடம் ஆதாரம் கேட்கிறார். பதவி ஆசையால் காங்கிரஸ் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார். காங்கிரஸ் என்றாலே ஊழல் என்றாகி விட்டது. ஊழலில் காங்கிரஸ் பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளது.

இவ்வாறு சோ பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x